ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை – சான்றுடன் பெ.மணியரசன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு அரசின் 2022 – 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்…..

கடந்த 18 .03.2022 அன்று தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் முன்வைத்த நிதிநிலை அறிக்கையில் பல ஏமாற்றங்கள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை மட்டும் குறிப்பிடலாம்.

கர்நாடகம், மராட்டியம், குசராத், அரியானா போன்ற மாநிலங்கள், தங்கள் மண்ணின் மக்களுக்கான வேலை முன்னுரிமை சட்ட ஏற்பாடுகள் செய்து, ஒதுக்கீடுகள் வழங்கியுள்ளன. வெளிமாநிலத்தவர்கள் வரைமுறையின்றி ஏகபோகமாக மாநில அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் அம்மாநிலங்களில் வேலைக்குச் சேர்ந்துவிட முடியாது.

ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைக்கு முன்னுரிமை வழங்கும் ஒதுக்கீடுகள் மு.க. ஸ்டாலின் ஆட்சியிலாவது வரும் என்று வேலை வாய்ப்பற்ற இளையோர் எதிர்பார்த்தனர். அதற்கான சட்ட அறிவிப்பு எதையும் இந்நிதிநிலை அறிக்கை தெரிவிக்கவில்லை. அதேவேளை வெளிமாநிலத்தவர்கள் தாராளமாகத் தமிழ்நாட்டிற்கு வந்து வேலைகள் பார்க்கவும் அவர்களுக்கு நலத் திட்டங்கள் – ஊக்குவிப்புகள் வழங்கவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் தமது நிதிநில அறிக்கையில் உறுதி கூறியுள்ளார்.

“தமிழகத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சி காரணமாக புலம் பெயர் தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடையவும் அவர்களின் சட்ட உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அறிமுகப்படுத்தப்படும். முதல் கட்டமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடமாடும் தகவல் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்படும்.”

வெளி மாநிலங்களின் தொழிலாளிகளை மேலும்மேலும் ஈர்ப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளார் நிதியமைச்சர். தமிழ்நாட்டில் மண்ணின் மக்கள் ஆண்களும் பெண்களும் பலவகைக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி பெற்றும் வேலையில்லாமல் அலைவோர் பல இலட்சம். அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற, வெளியார் வெள்ளத்தைத் தடுத்து, மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை அவர் அறிவிக்கவில்லை.

வெளி மாநிலத்தவர்கள் நமது மண்ணின் மக்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது மட்டுமின்றி மக்கள் தொகையில் பெருக்கத்தை ஏற்படுத்தி தமிழர்களை தாய் மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்கள் ஆக்கிடும் அவலம் உள்ளது. வாக்காளர் எண்ணிக்கையில் அயல் மாநிலத்தவர் எண்ணிக்கை கோடிக் கணக்கில் பெருத்து தமிழ்நாடு சார்ந்த அரசியல் கட்சிகளின் செல்வாக்கையும் இருப்பையும் கேள்விக் குறியாக்கும் அபாயம் இப்போதே உள்ளது. இந்த ஆபத்தை மேலும் அதிகப்படுத்தும் பாதையில் மு.க. ஸ்டாலின் அரசு செல்கிறது.

தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக வெளிமாநிலத் தொழிலாளர்களை அழைப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். அதிலாவது மண்ணின் மக்களாகிய தமிழர்களின் தொழில் வளர்ச்சிக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்யும் நோக்கம் இருக்கிறதா? இல்லை.

வடநாட்டுப் பெருங்குழுமங்கள் – வெளிநாட்டுப் பெருங்குழுமங்கள் – நிறுவனங்களை அழைப்பதற்கே முன்னுரிமை கொடுத்து வருகிறது தி.மு.க. ஆட்சி! “முதலீட்டுக்கான முதல்முகவரி தமிழ்நாடு” என்று அயல் நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுத்து வருகிறார் ஸ்டாலின்!

நிதிநிலை அறிக்கை 2022-2023இல் சிறிய, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான ஊக்குவிப்புகள் எதுவுமில்லை என்று கோவை, சேலம், ஈரோடு, திருச்சி போன்ற பல தொழில் மையங்களிலிருந்து தமிழ்நாட்டுத் தொழில்முனைவோர் அமைப்புகள் அறிக்கை கொடுத்துள்ளன.

ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில்வணிக சங்கங்களின் கூட்டமைப்புப் பொதுச் செயலாளர் பாலகிருட்டிணன், “தொழில் முனைவோர், வணிகர்கள், புதிய தொழில் தொடங்குவோருக்கு ஊக்குவிப்பு அறிவிப்புகள் இல்லை என்றும் புதிய தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் தொழிலுடன் வேலைவாய்ப்பும் உயர்ந்திட வாய்ப்பு ஏற்பட்டிருக்குமே என்றும் கூறியுள்ளார்.

தமி்ழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ், தமிழ் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் குறுந்தொழில்களைப் பாதுகாக்க தனிக்கடன் திட்டம் கோரி இருந்தோம். நிதிநிலை அறிக்கையில் அது இல்லாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது என்று தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

கோவை ஜாப் ஆர்டர்கள், உதிரிபாகங்கள் செய்து வருவோருக்கான குறுந்தொழில் பேட்டை அமைப்பதற்கான எதிர்பார்ப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) மாநிலத் தலைவர் சோ. மாரியப்பன் சேலத்தில் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்” தரும் கடன்களுக்கு 6 சதவீத வட்டி மானியத்தை 2023 மார்ச் வரை நீடிப்பது குறித்தும், இராணுவ தளவாட உற்பத்தி மையங்களை சேலம், ஓசூர், திருச்சி, கோவை, சென்னை ஆகிய இடங்களில் அமைப்பது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. புதிதாகத் தொடங்கும் தொழில்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எந்தவகை முன்அனுமதியும் தேவை இல்லை என்பதற்கான எந்த அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

திருச்சி மாவட்ட சிறுதொழில் நிறுவனங்களின் சங்கத் ( டிடிட்ஸ்கியா) தலைவர் முகில் பி.இராசப்பா, “நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன் எங்களை கலந்தாய்வுக்கு அரசு அழைத்தது. நாங்கள் சென்றோம். எங்கள் அமைப்பின் சார்பில் 33 கோரி்க்கைகள் அரசிடம் கொடுத்தோம். அவற்றில் ஒன்றைக்கூட நிதிநிலை அறிக்கை ஏற்கவில்லை. சிட்கோ திடல்களில் சிறுதொழில் முனைவோருக்கு சலுகை விலையில் நிலம் விற்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை. பிரபலமான பி.எச்.இ.எல் நிறுவனம், ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ள திருச்சி பகுதியில் சிறுகுறு நடுத்தரத் தொழிற்சாலைகள் (MSMES) வளர்ச்சிக்கு புதிய அறிவிப்பு எதுவும் இல்லாதது வருத்தமளிக்கிறது” என்கிறார்.

இவ்வாறு தமிழ்நாடெங்கும் சிறு குறு நடுத்தரத் தொழில் முனைவோரின் குமுறல் இருக்கிறது.

தமிழ்நாடு அரசில் ஆறு இலட்சம் பணியிடங்கள் பல்லாண்டுகளாகக் காலியாக உள்ளன. அரசுப் பணியில் உள்ள 4 இலட்சம் பேர் ஒப்பந்த ஊழியர்களாக, தற்காலிகர்களாக, புறச் சேவை(outsourcing) செய்பவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நிரந்தரப் பணிகளோ, காலி இடங்களுக்கு புதிய பணிஅமர்த்தமோ செய்வதற்கான அறிவிப்பு எதுவும் நிதி நிலை அறிக்கையில் இல்லை. எல்லாத் துறையிலும் குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அல்லது புறச் சேவை ஊழியர்களையும் தொழிலாளர்களையும் சேர்ப்பதுதான் தமி்ழ்நாடு அரசின் புதிய திட்டமாக ஊகிக்க முடிகிறது. இந்த ஊகத்திற்குக் காரணம் நிதியமைச்சரின் பேச்சுதான்.

“மனித வளமே ஒரு நிறுவனத்தின் மிக முக்கியமான சொத்தாகும். காலிப் பணி இடங்கள் அதிக அளவில் உள்ள அதே வேளையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவினங்கள் மிகவும் அதிகமாக உள்ள ஓர் இக்கட்டான சூழலில் உள்ளோம். நடைமுறையில் உள்ள ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கான முறைகளைச் சீரமைப்பது மிகவும் அவசியமானது.”

நிதியமைச்சரின் இந்தக் கருத்து தற்போது அரசுப்பணியில் ஊழியர்கள் சேர்ப்பதற்கான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC), பணிநிரந்தரம், சம்பள உயர்வு, ஓய்வூதியம் போன்றவற்றையெல்லாம் மாற்றி அமைக்க விரும்புகிறார் என்று தெரிகிறது. முதலமைச்சரோடு இவை பற்றியெல்லாம் விவாதிக்காமல் அவராகச் சொல்ல மாட்டார்.

நிரந்தரப் பணி நியமனம் வேண்டாம். விலைவாசி, வாழ்க்கை செலவுகள் போன்றவை அடிப்படையில் சம்பள(கூலி) வரையறுப்பு வேண்டாம். சம்பள உயர்வும் வேண்டாம். ஓய்வூதியம் வேண்டாம். ஒப்பந்தம், வெளிநிறுவனப் பணி (outsourcing) போன்ற வடிவங்களில் வரம்பு கட்டப்பட்ட தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு வேலைகளைச் செய்ய வைப்பது என்ற திட்டம் நிதியமைச்சரின் பேச்சில் தொனிக்கிறது.

புலம் பெயர்ந்து வந்த வெளிமாநிலத் தொழிலாளிகள், ஊழியர்கள் இத்திட்டத்திற்குப் பொருத்தமானவர்கள். இப்பொழுது தமிழ்நாடு அரசின் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட தமிழ்நாட்டின் மண்ணின் மக்களே இவ்வாறு ஒப்பந்தப் பணியார்களாக, வெளிநிறுவனப் பணியாளர்களாக, தற்காலிகப் பணியாளர்களாகத்தான் வேலை பார்க்கிறார்கள். இவர்களுக்குப் பண உயர்வும் கிடையாது; பதவி உயர்வும் கிடையாது; பணி நிரந்தரமும் கிடையாது.

தனியார் துறையில் தமிழ்நாட்டு இளையோரை வேலையில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களை தி.மு.க. ஆட்சி நடத்தி வருகிறது. இவையெல்லாம் பின்னர் அழைத்து வரப்போகும் வெளிமாநிலத்தார் வெள்ளத்தை மூடி மறைப்பதற்கான திரைகளா என்ற ஐயம் எழுகிறது.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாகக் கூறியது. ஆனால் அது பற்றி நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு எதுவுமில்லை.

இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? திராவிடம் என்றாலே அயல் என்றும், மண்ணின் மக்களைப் புறக்கணிப்பது என்றும் பொருளோ?

மேலே சுட்டிக்காட்டப்பட்ட பகுதிகளையாவது திருத்தி, மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பும் தொழில் நடத்தும் வாய்ப்புகளும் கூடுதலாகத் தர தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கோட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response