தமிழ்நாடு அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் எளிய குடும்பத்து மாணவர்கள் உயர் கல்வி பெற உதவும் திட்டம் என்று பழ.நெடுமாறன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்….
தமிழக அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000/- உதவித் தொகையாக வழங்குதல்,
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்., எய்ம்ஸ் ஆகியவற்றில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவை அரசே ஏற்பது,
அரசின் நிதியுதவியின்றி செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் தமிழ்வழியில் 1முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்
போன்ற அறிவிப்புகள் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் உயர்கல்விப் பெற வழிவகுக்கும் திட்டங்களாகும். இந்த அறிவிப்புகளை வரவேற்று நிதியமைச்சரையும், முதலமைச்சரையும் மனமாறப் பாராட்டுகிறேன்.
தமிழ் இலக்கியத்தில் புலவர், முதுகலைப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்க முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
கீழடி, சிவகளை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அகழாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்ள ரூ. 5கோடி ஒதுக்கியிருப்பது தமிழரின் தொன்மையை உலகறியச் செய்வதாகும். மேற்கண்ட இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்படும் என நம்புகிறேன்.
பல்வேறு சமூகநலத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கதாகும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.