ஈரோட்டில் அம்பேத்கர் முழு உருவச் சிலை திறப்பு – முதல்வருக்கு பெரியார் தொண்டர்கள் நன்றி

தந்தைபெரியார் பிறந்த ஊர் என்பதால் சமூகநீதி மண் என்கிற பெருமை கொண்டிருக்கும் ஈரோடு மாநகரில் அம்பேத்கருக்கு ஒரு சிலை இல்லை. இதனால், ஈரோட்டின் முக்கிய சந்திப்புகளில் ஒன்றான பன்னீர்செல்வம் பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி அளிக்கக் கோரி 28 அமைப்புகள் ஒருங்கிணைந்து, புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக் குழுவுக்கு திராவிடர்கழகத்தைச் சேர்ந்த சண்முகம் தலைமை தாங்கினார்.

இக்குழு சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்துவந்தன. முந்தைய அதிமுக ஆட்சி அதைக் கண்டுகொள்ளவேயில்லை.அதனால், இது சம்மந்தமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமளவுக்குச் சென்றது.

இந்நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஈரோட்டைச் சேர்ந்த, வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியின் கவனத்துக்கு இக்கோரிக்கை கொண்டு செல்லப்பட்டது. அவர், தமிழக முதல்வரின் கவனத்திற்கு இக்கோரிக்கையைக் கொண்டு சென்றுள்ளார்.

அதை ஏற்று,அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை திறக்க 22- 1-22 தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, இன்று (26.01.2022 புதன் நண்பகல் 12 மணியளவில்) ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெண்கலச் சிலையை (8 அடி உயரம் ) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்துள்ளார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார்.

இதைத்தொடர்ந்து,

சமூக நீதிமண்ணில் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் தந்தை பெரியார் சிலைக்கு அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலை, வரலாறு வாழ்த்தட்டும் என்றும்

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி நன்றி,
சமூக நீதி மண்ணில் சமூக நீதிப் புரட்சி செய்த தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

எனவும் நன்றி சொல்லி மகிழ்கின்றனர் சிலை அமைப்புக் குழுவினர்.

Leave a Response