தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நிலை – சுகாதாரத்துறைச் செயலர் கூறும் தகவல்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

டெல்டா, ஒமிக்ரான் பரவலைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் ஏற்றம் குறைந்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி 30% ஆக இருந்த பாதிப்பு தற்போது 20% ஆக குறைந்துள்ளது. 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆக்சிஜன் சிகிச்சை பெறுவோர் மற்றும் உயிரிழப்பு குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் இறப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளது. டிசம்பரில் 100 பேரில் ஒருவர் உயிரிழப்பு, இன்று 1,000 பேரில் ஒருவர் உயிரிழப்பு. இருப்பினும் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

பூஸ்டர் டோஸுக்கு தகுதியானவர்கள் உடனடியாகத் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், ராயபுரம், தண்டையார்பேட்டையில் தொற்றுப் பரவல் குறைந்தது. ஏற்கனவே பரவல் அதிகரித்து வந்த மண்டலங்களில் தற்போது தொற்று குறையத் தொடங்கியுள்ளது. அடையாறு, அம்பத்தூர், வளசரவாக்கத்திலும் தொற்று பரவல் குறையத் தொடங்கி உள்ளது. திரு.வி.க. நகர், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தொற்று பரவல் 1% அளவுக்கு உயர்ந்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தொற்று 10% அதிகரித்து சமாளிப்பது பெரும் சவாலாக உள்ளது.

திருவொற்றியூர், மாதவரம், மணலி மண்டலங்களில் தொற்றை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. மக்கள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் கொரோனா வரும். பல்வேறு இணை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response