பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது சனநாயகக் குரல்வளையை நெரிப்பது சனநாயகப்படுகொலை என சீமான் கருத்து தெரிவி்த்துள்ளார்
அவர் மேலும் கூறியதாவது…
பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடைவிதித்து, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
பாராளுமன்றத்தில் சட்டங்களை இயற்றும்போதும், அவற்றைத் திருத்தம் செய்யும்போதும் அதனை எவ்வித விவாதங்களுக்கும், தர்க்கங்களுக்கும் உட்படுத்தாது, மாற்றுக்கருத்துக்கே இடமுமளிக்காத வகையில் கொடுங்கோல் சட்டங்களை அவசர அவசரமாக இயற்றி வரும் பாஜக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது.
இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோன்மை நடவடிக்கைகளையும், சட்டத்தின் வழியே நிகழ்த்தப்படும் அதிகார வல்லாண்மையையும், ஒற்றைமயத்தை நிலைநிறுத்தி, மக்களுக்கான ஆட்சி அதிகாரக்கட்டமைப்பு முறைகளை அவர்களுக்கெதிராகவே மாற்றும்வகையில் அடுக்கடுக்காக இயற்றப்படும் பல்வேறு சட்டங்களையும் எதிர்த்துக் குரலெழுப்பா வண்ணம் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை முடக்கி, அவர்களது குரல்வளையை நெரிப்பது மிகப்பெரும் சனநாயகப் படுகொலையாகும்.
இது அரும்பாடுபட்டு இரத்தம் சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து, நூற்றாண்டுகாலம் போராடிப் பெற்றுத் தந்த விடுதலை எனும் மகத்துவமானக் கோட்பாட்டைக் குலைக்கும் கொடுஞ்செயலாகும். என சீமான் கூறியுள்ளார்.