19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிக்கூடங்கள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன.

கொரோனா பாதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து, 17 மாதங்களுக்குப் பிறகு 2021 செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், 19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட இருக்கின்றன.34 இலட்சம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர இருக்கின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க பாராளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்பு கொடுங்கள்” என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகமங்கள் செய்துள்ளன.

ஆசிரியர்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழை பள்ளியில் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பள்ளிக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்குப் பள்ளி நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

“நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். அவர்கள் புத்துணர்வுடன் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக ஆசிரியர்கள் தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை பள்ளிகள் திறந்ததும் 10 முதல் 15 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதனைப் பின்பற்ற வேண்டும் என்றும், அதன்பிறகே பாடங்களை நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதற்கேற்றாற்போல், அனைத்து நடவடிக்கைகளிலும் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாகக் குறையாத காரணத்தினால், பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பின்பற்றவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வேண்டும். மாணவர்கள் கண்டிப்பாகப் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை. பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வழிக்கல்வியையும் தொடரலாம் என்றெல்லாம் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

அதனை பின்பற்றியே இன்று 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. இதற்காக கடந்த சில நாட்களாகவே பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுவரை, ஆன்லைன் வழிக்கல்வியால் சலித்துப்போன மாணவர்கள் இன்று முதல் நேரடி வகுப்பில் ஆர்வத்துடன் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதேபோல், பல நாட்களாக செல்போன் மற்றும் கணினி வாயிலாக மாணவர்களின் முகத்தை அரையும், குறையுமாகப் பார்த்த ஆசிரியர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்களை நேரடியாக சந்திக்க ஆர்வத்துடன் உள்ளனர். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Response