இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மகத்தான திட்டம் – விடுதலை இராசேந்திரன் அறிக்கை

“தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்” என்று திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்….

இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் இப்போது அமல்படுத்தப்பட இருக்கிறது. பிறகு மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையோடு இணைத்து மதச் சாயம் பூச நினைப்பது முற்றிலும் தவறான பார்வை.

இரண்டு திட்டங்களிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இதுவும் மற்றொரு புதிய கல்விக் கொள்கை என்பது சரியான கருத்து அல்ல. இரண்டிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிற நோக்கங்களே வேறு. புதிய கல்விக் கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறை சாரா கல்வியைக் கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஊடுருவி கல்வியைத் தங்கள் வசப்படுத்திக் கொள்கிற வாய்ப்பு இருக்கிற காரணத்தினால், கல்வியாளர்கள் பலரும் எதிர்த்தார்கள், நாமும் எதிர்த்தோம்.

ஆனால் தமிழ்நாடு அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் எந்த நோக்கத்தின் கீழ் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும். “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக் குழு உருவாக்கப்படும். அந்த கொள்கையின் அடிப்படையிலேயே தன்னார்வலர்கள் செயல்படுவார்கள்” என்றும் முதலமைச்சர் அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த இரண்டாண்டு காலமாக கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. குறிப்பாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை குழந்தைகளின் கற்றல் திறன் முற்றாகப் பாதிக்கப்பட்டுவிட்டது. பள்ளிகளுடைய சூழ்நிலைகளிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டார்கள். அவர்களிடம் மீண்டும் கற்றல் திறனை உருவாக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. மீண்டும் அவர்களைப் பள்ளிக்கு வரவழைக்க வேண்டும். இதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கிற திட்டம் தான் ‘இல்லம் தேடிக் கல்வித்’ திட்டம் ஆகும். இந்த கல்வித் திட்டம் மதச்சாயம் கொண்டது, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் இருக்கிறது என்றெல்லாம் பேசுவதில் எந்த உண்மையும் இல்லை. திட்டத்தினுடைய நோக்கம் என்பது அரசு வெளியிட்டிருக்கிற செய்திக் குறிப்பில் தெளிவாக விளக்கப்பட்டு இருக்கிறது.

இந்தத் திட்டத்தில் உள்ளூர் கிராம மக்களின் பங்களிப்பை இணைத்து, நாட்டுப்புற கலை நிகழ்வுகளை நடத்தி, குழந்தைகளை மகிழ்வூட்டி கற்றல் திறனை மேம்படுத்துகிற பணிகளுக்கு தன்னார்வலர்களும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் பயன்படுத்தப்பட இருக்கிறார்கள். அவர்கள் வழியாக ஆர்.எஸ்.எஸ் கொள்கை தமிழ்நாட்டில் பரவி விடும் என்றெல்லாம் பேசுவது வீண் கற்பனை ஆகும்.

தமிழ்நாடு, உத்திரப்பிரதேசமோ, பீகாரோ அல்ல மதவாதத்திற்கு எதிரான, உறுதியான மண் தமிழ்நாடு. மட்டுமின்றி இந்த தன்னார்வலர்கள்,ஓய்வு பெற்ற கல்வியாளர்கள் குழந்தைகளுக்கு பள்ளிக்கு வெளியே எதைக் கற்பிக்க வேண்டும் என்பதற்கான பாடத்திட்டத்தையும் தமிழ்நாடு அரசு வகுத்துத் தந்திருக்கிறது. அவர்கள் மதக் கல்வியையோ, வேறு பழைய மூட நம்பிக்கைகளையோ குழந்தைகளிடம் கொண்டு சென்று விடக் கூடாது என்பதற்காக பள்ளிச் சூழலில் ஏற்கெனவே பெற்ற கற்றல் திறனை மேம்ப்படுத்த வேண்டும் என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமின்றி, ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகள் கற்றலுக்காக கூடும் இடம், மதம் சார்ந்த இடமாக இருக்கக் கூடாது, பாகுபாடுகள் காட்டாத இடமாக இருக்க வேண்டும் என்று அரசு தெளிவாக அறிவுறுத்தியிருக்கிறது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு நிதி நிலை அறிக்கையில் 200 கோடி ரூபாயை ஏற்கெனவே ஒதுக்கி இருக்கிறது. எனவே இது தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிற திட்டம்.

ஒன்றிய ஆட்சியின் கீழ், ‘சமக்ர சிக் ஷா’ என்ற திட்டம் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறைப்படுத்தப்படுகிற திட்டம். ஒன்றிய ஆட்சியின் திட்டத்தை செயல்படுத்தப்படுகிற அதிகாரியின் கீழ் தான் தமிழ்நாட்டின் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தின் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று தினமலரில் செய்தி வெளியிட்டிருப்பது, முற்றிலும் மாறானது. உண்மைக்குப் புறம்பானது.

மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் பல்வேறு கல்வித் துறை அதிகாரிகளைக் கொண்ட நான்கு அடுக்கு நிர்வாகக் கட்டமைப்பு இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாகக் கட்டமைப்பு தான் இந்தப் பணிகளை மேற்கொள்ளும். தன்னார்வலர்களையும் இந்தக் குழு தான் தேர்வு செய்யும். பள்ளிக்கு வெளியே தன்னார்வலர்கள் கற்றுத் தரக் கூடிய பாடத் திட்டங்களையும், தமிழ்நாடு அரசின் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தான் உருவாக்கித் தந்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒன்றிய அரசு அல்ல. உள்ளூர் தன்னார்வலர்களாக, உள்ளூர் பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் 2021-2021 ஆம் கல்வியாண்டில் மே மாதம் வரை மட்டுமே நீடிக்க வேண்டும் என்று அரசு தெளிவுபடுத்தி இருக்கிறது. மேலும் விவரங்களை தேட
(http://illamthedikalvi.tnschools.gov.in/) என்ற இணையதளத்தைப் பார்த்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டுக் குழந்தைகள் கொரோனா பாதிப்பால் இழந்துவிட்ட கற்றல் திறனை மேம்படுத்தும் ஒரு மகத்தான திட்டம் இது.

உள்ளூர் மக்களின் பங்களிப்போடு இத்திட்டம் உருவாகியிருப்பது மேலும் தனிச்சிறப்பு. இந்தியாவிலேயே முதன் முதலாக திமுக ஆட்சி தான் இதை நடைமுறைப்படுத்துகிறது. இதில் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவி விடும் என்பதெல்லாம் வீண் கற்பனை.

மரக்காணத்தில் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து தமிழ்நாடு முதல்வர் பேசியதை நினைவு கூற விரும்புகிறேன். ‘இத்திட்டம் இலட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றப் போகிறது. நூற்றாண்டு காலமாகப் புறக்கணிக்கப்பட்ட கல்வியை மக்களிடம் கொண்டு சேர்த்தது திராவிட இயக்கம் தான். திராவிட இயக்கம் என்றால் என்னவென்று கேள்வி கேட்கும் கோமாளிகளும், அதைப் பற்றி அறியாதவர்களும் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இது தான் திராவிடக் கொள்கை என்பதை மறந்துவிடக் கூடாது’ என்று முதலமைச்சர் தெளிவாகப் பேசி இருக்கிறார். எனவே இத்திட்டத்திற்கு மதச்சாயம் பூசுவது என்பது வீண் கற்பனை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response