பிரியங்கா காந்தி தடுத்து வைக்கப்பட்ட இடத்தில் விடிய விடியப் போராடும் காங்கிரசார் – உபி பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கேரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அம்மாவட்டத்தின் திகுனியாபகுதியில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் கலந்து கொள்ளும் பாஜக கட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் விவசாயிகள் போராட்டம் செய்தனர். அப்போது பாஜகவினரின் வாகனங்கள் அணிவகுப்பாகச் சென்றபோது ஒரு கார் விவசாயிகள் மீது வேகமாக மோதியது.

இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில் 4 விவசாயிகள், 1 செய்தியாளர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதில் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் கார் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மீது உள்பட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

இதை அறிந்தவுடன் நேற்று டெல்லியில் இருந்து காங்கிரசு மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசம் சென்றார்.

லக்கிம்பூரில் உள்ள கிராமத்திற்கு பிரியங்கா காந்தி செல்ல முயன்ற போது அவர் காவல்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டார். சிதாபூர் என்ற கிராமத்தில் இவர் தடுத்து நிறுத்தப்பட்டு விடுதி ஒன்றில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதி முன் திரண்ட நூற்றுக்கணக்கான காங்கிரசு தொண்டர்கள் இரவு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் அந்த விடுதி முன்புள்ள சாலையிலேயே தங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response