ஐபிஎல் 14 – சென்னை அணியை வெற்றி பெற வைத்த தனி ஒருவன்

ஐபிஎல் டி 20 மட்டைப்பந்துப் போட்டித் தொடரின் 14 ஆவது ஆண்டுப் போட்டிகள் 2021 ஏப்ரல் மாதம் இந்தியாவில் நடைபெற்றது. 29 ஆட்டங்கள் முடிவடைந்திருந்த நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருந்தது. கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருக்கும்போது ஐ.பி.எல் தொடர் நடைபெறுவதற்கு கண்டனங்கள் எழுந்தன. மேலும், மே மாத தொடக்கத்தில் சில வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து போட்டிகள் நிறுத்தப்பட்டன.

அதன்பின்,14 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று (செப்டம்பர் 19)தொடங்கியது.

முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் தலைவர் தோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்காக ருதுராஜ் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரிலேயெ டு பிளிசிஸ்(0) ரன் ஏதும் எடுக்காமல் டிரென்ட் பவுல்ட் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த மொயீன் அலி(0) 2-வது ஓவரில் மில்னே பந்துவீச்சில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். 3-வது ஓவரில் அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காத நிலையில், காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா(4), தோனி(3) அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருதுராஜ் கெய்க்வாட், நிலைத்து நின்று ஆடி அரைசதத்தைக் கடந்தார்.

அடுத்து வந்த ஜடேஜா 33 பந்துகளில் 26 ரன்களில் எடுத்த நிலையில், குருனால் பாண்ட்யா வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதி ஓவர்களில் பிராவோ 3 சிக்சர்களை பறக்கவிட்டு 23 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை நிலைத்து நின்று ஆடிய ருதுராஜ், 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக போல்ட், மில்னே மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பில் குயிண்டான் டி காக் மற்றும் அன்மோல்பிரித் சிங் ஆகியோர் களமிறங்கினர். அந்த ஜோடியில் அதிரடியாக ரன் சேர்த்த டி காக் 17 (12) ரன்களும், அவரைத்தொடர்ந்து அன்மோல்பிரித் சிங் 16 (14) ரன்களும் எடுத்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 (7) ரன்களும், இஷான் கிஷன் 11 (10) ரன்களும், கேப்டன் பொல்லார்டு 15 (14) ரன்களும், குருணால் பாண்ட்யா 4 (5) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசி ஒவரில் வெற்றிபெற 23 தேவைப்பட்டநிலையில் ஆடம் மில்னே 15 (15) ரன்களும், அடுத்து களமிறங்கிய ராகுல் சாஹர் (0) ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுரவ் திவாரி 50 (40) ரன்களும், பும்ரா 1(2) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பின்னர் மும்பை அணி 20 ஒவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Leave a Response