வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் – அதிமுக எதிர்ப்பு

ஒன்றிய அரசு கொண்டுவந்த, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்களுக்கு, தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வேண்டும் என்று போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்கள் முடிவில் உறுதியாக உள்ளனர். ஆனால் எக்காரணம் கொண்டும் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற மாட்டாது என்று ஒன்றிய அரசும் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது…..

3 வேளாண் சட்டங்களையும் முழுமையாக எதிர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது, இந்தச் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

வேளாண் சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதுபோல இருப்பதாக விவசாயிகள் சொல்கிறார்கள்; அதனை எதிர்த்துப் போராட்டமும் நடைபெற்று வருகிறது.

விவசாயிகளின் வாழ்வுசெழிக்க 3 வேளாண் சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார்.

வேளாண் சட்டங்களை இரத்துசெய்யக் கோரும் தீர்மானத்திற்கு ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,பாமக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

தீர்மானத்தின் மீது பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன். பேசும் போது…..

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் வேளாண் சட்டங்கள் உள்ளன; விவசாயிகளின் வேதனையை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தருகிறோம் எனக் கூறினார்.

விவசாயிகள் மத்தியில் வேளாண் சட்டம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என பா.ம.க. சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

காங்கிரசு சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசும் போது….

போராடும் விவசாயிகளுக்கு நான் இருக்கிறேன் என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார் என கூறினார்.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன் பேசும் போது,

அவசர அவசரமாக தனித் தீர்மானம் கொண்டு வராமல், அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசித்து மத்திய அரசிடம் வலியுறுத்தலாம்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதீரான் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது…..

உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும். வேளாண் சட்டம் மீதான சாதக பாதகங்களை அறிந்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கலாம்; பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்து தீர்மானத்தைக் கொண்டு வரலாம் எனக் கூறினார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிராக பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதன்பின், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்கமறுத்து அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Response