கி.வீரமணி கண்ணீர் – உணர்ச்சிவயப்பட்ட மு.க.ஸ்டாலின்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியாரின் போர்க் குரல் மனித உரிமையின் உச்சம் – ஜாதி – தீண்டாமை ஒழிப்பின் உன்னத வெளிச்சம்!

அந்த வகையில் 2021 ஆகஸ்ட் 14 வரலாற்றில் வாகை சூடிய நாள். தளபதி மானமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்தம் நூறாம் நாள் ஆட்சியன்று அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் என்ற அடிப்படையில் 58 பேர்களுக்கு ஆணை வழங்கிய நாள். ஆடிப்பாடி மகிழ வேண்டிய அறிவுப் பெரு நாள்.

அந்நாளில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முக்கிய அமைச்சர்கள் புடைசூழ தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மாலை 5.50 மணிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியது – சம்பிரதாய மானதல்ல. மனிதனின் மகத் தான குணமான நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடே! உயிரினும் மேலான கொள்கையின் பிளீறலே!

அதனைத் தொடர்ந்து அய்யா தங்கிய, அறிக் கைகளை எழுதிய அந்தக் கூடத்திற்கு (இப்பொழுது அது அறிவுலக ஆசானின் அருங் காட்சியகம்) அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி,

பி.கே. சேகர்பாபு, தி.மு.க.வின் பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்

ஆ. இராசா எம்.பி., எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ. பரந்தாமன் ஆகியோர் புடை சூழ முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் வருகை தர திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் அன்போடு வரவேற்றார். அருங்காட்சியகத்தில் உள்ள அய்யா சிலைமுன் முதல் அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி, பேராசிரியர் முனைவர் கண்ணபிரான் இரவி சங்கர் எழுதிய “தமிழா? சமஸ்கிருதமா?” என்ற நூலையும் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைந்த உரையாடலை விவரிக்க வார்த்தைகள் போதாது. அவை நிகழ்ச் சிகள் அல்ல- சொல் குடுவையில் அடக்குவதற்கு; அந்த 20 நிமிட நேரம் ஆனந்தக் கண்ணீரின் ஊற்று! அளவளாவல் என்னும் இலக்கணத் திற்கான பாயிரம்.

அய்யா அவர்கள் ஓய்வு எடுக்கும் கட்டில். அதில் அய்யாவின் உருவப்படம். அதனை ஒட்டி திராவிட இயக்க வழித்தோன்றல்கள். பழைய வற்றை அசைப் போட்டார்கள்; மலரும் நினைவுகள் மணம் வீசின.

ஆசிரியர் பேசுகின்றார் உணர்ச்சித் ததும்ப – “இதே இடத்தில்தான் (அய்யாவின் கட்டில்) அய்யா அமர்ந்திருந்தார்கள். முன் கூட்டியே எவ்வித அறி விப்புமின்றி முதல் அமைச்சர் கலைஞர் வருகிறார் – அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி – அய்யா எழுந்திருக்க முயலுகிறார் – கலைஞர் தடுத்தாள்கிறார்.

உரையாடல் தொடங்குகிறது. தொடர்ச்சியாக முதல் அமைச்சர் – “அய்யா, உங்கள் அறிக்கை யினைப் பார்த்தேன். அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சிக்கான அறிக்கையைப் படித்தேன்.

அய்யா, உங்கள் பிள்ளைகள் ஆட்சியில் இருக்கும்போது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? வீதியில், இறங்கிப் போராட வேண்டுமா?’ என்று நெகிழ்ச்சியோடு, வாஞ்சையோடு கலைஞர் கேட்கிறார்.

‘இதில் என்ன இருக்கிறது? ஒரு கொள்கைக்காகப் போராட வேண்டியது என் கடமை. அதனைத் தான் நான் செய்கிறேன். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.

நீங்களோ ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறீர்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள்- சட்டப்படி என்னைக் கைது செய்யலாம்” என்றார்.

‘உங்களைக் கைது செய்யவா அய்யா நாங்கள் ஆட்சியில் இருப்பது?’ என்று வார்த்தைகள் தழுதழுக்க அய்யாவின் கரங்களைப் பற்றுகிறார். அவரை அறியாமலேயே கண்களில் நீர் கொட்டுகின்றது – மிகவும் உணர்ச்சிகரமான தருணம் இது!

அய்யா என்ன செய்தார்? முதல் அமைச்சர் கலைஞரின் முதுகை ஒரு தட்டுத் தட்டி ‘உங்களை வீரராக நினைத்தேன். இப்படிக் கோழையாக இருக்கிறீர்களே!’ என்றார்.

‘இல்லை அய்யா மன்னிக்கணும். நாங்கள் சட்டம் இயற்றி உங்கள் கொள்கையை நிறைவேற்றுகிறோம் – தயவு செய்து கர்ப்பக்கிரகக் கிளர்ச்சியை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று வேண்டிக் கொண்டார்.

‘ரொம்ப மகிழ்ச்சி! ரொம்ப மகிழ்ச்சி!’ எனக்குக் காரியம் தான் முக்கியம். சட்டம் செய்யுங்கள்- அறிவித்த பேராட்டத்தை ஒத்தி வைக்கிறேன்’ என்று தந்தை பெரியார் சொன்னதை அப்படியே கழகத் தலைவர் சொன்னபோது அவரே உணர்ச்சி வயப்பட்டார். முதல் அமைச்சர் உட்பட அனைவரும் ஒரு நிமிடம் உணர்ச்சிமயமாக உறைந்து விட்டனர்.

அன்றைக்கு அய்யாவிடம் முதல் அமைச்சர் கலைஞர் சொன்னது – அய்யா அவர்கள் அதற்குப் பதில் சொன்னது எல்லாம் நடைபெற்ற இதே இடத்தில்தான் நாமெல்லாம் – அந்தப் பணியின் வெற்றியின் பெருமிதத்தோடு அமர்ந்து கொண்டு இருக்கிறோம் என்று, இன்றைக்கு 51 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற நிகழ்ச்சியை கூடுதல் குறைச்சல் இன்றிக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் திராவிடர்கழகத் தலைவர்.

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில்வரலாற்று வெற்றியை நெஞ்சில் தாங்கி உணர்வுகளைப் பரிமாறிக் கொண்ட உன்னத நிகழ்ச்சியும், காட்சியும் அது.

முதல் அமைச்சர் கழகத் தலைவரைப் பார்த்து, ‘நீங்கள் இன்றைக்குப் பெரு மகிழ்ச்சியில் திளைத்திருப்பீர்கள் என்று நாங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம் – ஆனால் இந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை’ என்றார்.

அப்பொழுது ஆசிரியர் சொன்னார். ‘உண்மை தான். கரோனா கடும் தொற்று நாட்டில் பரவிக் கொண்டிருந்த நிலையில், வயதையும் எண்ணி எனக்குள் ஒரு எண்ணம் இடறிக் கொண்டே இருந்தது. இரண்டு பிரச்சினைகளை நிறைவேற்ற வேண்டும் – அதுவரை நம் உயிர் இருக்க வேண்டும் – ஒன்று, அய்யா களத்தில் நின்ற இறுதிப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நிறைவேறுவதைப் பார்க்க வேண்டும். இரண்டு, தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதைநான் பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது – இந்த இரண்டையும் நான் பார்த்து விட்டேன் அது போதும்’ என்று ஆசிரியர் அவர்கள் தழுதழுத்து சொன்னபோது முதல் அமைச்சரும், அமைச்சர் துரைமுருகனும் ஆசிரியர் அவர்களின் கரங்களைப் பற்றி உணர்ச்சி வயப்பட்டனர். அங்கு இருந்த அனைவரும் உணர்ச்சி வயப்பட்ட தருணம் அது.

ஆம், வரலாற்று வரிகளின் வாய்கள் பேசின. ஆனந்தமயமான மகிழ்ச்சியும், உணர்ச்சியும் ஒன்று கலந்த சங்கமத்தைப் பார்க்க முடிந்தது.

இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சில தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன்றைக்கு மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களுக்கான ஆணையை முதல் அமைச்சர் வழங்கினார்.

அதே மயிலாப்பூர் கோயிலில் 1971இல் நடந்த ஒன்றைக் கழத் தலைவர் நினைவூட்டினார். மயிலாப்பூர் தொகுதியில் திமுக கூட்டணியில் ம.பொ.சி. நின்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அனந்தநாயகி போட்டியிட்டார்.

பக்தரான ம.பொ.சி. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அர்ச்சகரிடம் தன் பெயரில் ஓர் அர்ச்சனை செய்யச் சொல்லி அதற்குரிய தட்சணையையும் கொடுத்தார். கபாலீஸ்வரர் அருளால் தேர்தலில் வெற்றி பெற வேண்டினார். அத்தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.

அதைப்பற்றி தேர்தல் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் ம.பொ.சி.யே சொன்னது தான் சுவையான தகவல்.

‘கபாலீஸ்வரர் கோயிலில் எனது வெற்றிக்காக அர்ச்சனை செய்யக் கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்த அர்ச்சகர் அவ்வாறு செய்யவில்லை என்பதை மற்றவரிடம் அர்ச்சகரே சொன்னதை நான் கேள்விப்பட்டேன் பெரியாரும், வீரமணியும் இவர்கள் பற்றிக் கூறும் கருத்தை அப்பொழுது உணர்ந்தேன்’ என்று ம.பொ.சி. அவர்கள் சொன்னதையும் ஆசிரியர் சொன்னபோது ஒரே சிரிப்பு – கலகலப்பு!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் என்கிறபோது ஒரு கூடுதல் தகவல்:

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு மற்றெல்லாரையும்விட அதிகத் தொகையாகிய ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார் மேயரான பிட்டி. தியாகராயர். அந்தக் காலத்தில் ரூபாய் 10 ஆயிரம் என்பது மிகப் பெரிய தொகையே!

கும்பாபிஷேகத்தன்று மேயர் தியாகராயர் செல்கிறார். அவரை மேடையில் உட்கார வைக்காமல், கீழே உட்கார வைத்தார்கள். அதே நேரத்தில் அவர் மேயராக இருக்கும் அலுவலகத்தில் பணிபுரியும் சிப்பந்திப் பார்ப்பனர் உட்பட பலரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

அந்தக் காட்சியைக் கண்ட தியாகராயருக்குச் சுயமரியாதை உணர்வு சூடேறியது. அதுவரை எலியும், பூனையுமாக இருந்தவர்கள் தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும்.

டிரைவரைக் கூப்பிட்டு, எடு வண்டியை – நாயர் வீட்டுக்கு விடு என்றார். டிரைவருக்கோ ஆச்சரியம் – ஏனென்றால் இருவரும் அப்படிப் பகை உணர்ச்சி கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர் (தியாகராயர் ஆன்மிகவாதி, டாக்டர் டி.எம். நாயர் நாத்திகர் என்பதும் குறிப்பிடத்தக்கது).

தியாகராயரைக் கண்ட நாயருக்கு மிகவும் ஆச்சரியம் – ஏன் அதிர்ச்சியும்கூட ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

பார்ப்பனர்களின் ஒரு துவேஷ நிகழ்ச்சி ஒரு பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தைக் கட்டி அமைப்பதற்கு ஒரு வகையில் தூண்டுகோலாக அமைந்ததும் நல்லதாகவே போய்விட்டது. அதே கபாலீஸ்வரர் கோயிலில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் நியமன ஆணை வழங்கும் விழா திமுக ஆட்சியில்! – வரலாற்றின் விசித்திரம்தான் என்னே!

(திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விடுதலை நாளேட்டில் எழுதியது)

Leave a Response