புலவர் இளங்குமரனாரை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்க – சீமான் வேண்டுகோள்

தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்திட்ட தமிழ்ப்பேரறிஞர், ஐயா புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்ட பேரிழப்பு என்று சீமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….

முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர், மொழி வளர்ச்சியையே மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை, செந்தமிழ் அந்தணர் பெருமதிப்புக்குரிய ஐயா புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ் அறிவுலகத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா இளங்குமரனார் அவர்கள் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்வினைத் தொடங்கி, நூலாசிரியராக, பாவலராக, பதிப்பாசிரியராக, உரையாசிரியராக, தொகுப்பாசிரியராக, இதழாசிரியராக எனப் பல்வேறு துறைகளிலும் திறம்படச்செயலாற்றி, தமது ஒப்பற்ற மொழித்திறன் மூலம் முதுமுனைவராக உயர்ந்து சிறந்து, தமிழ் வளர்த்தப் பெருமகனாவார்.

செந்தமிழ்ச்சொற்பொருட்களஞ்சியம், திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை, தேவநேயம், திருக்குறள் கட்டுரை என 500க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றி அன்னைத்தமிழ் வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுதும் அரும்பணியாற்றிய அறிவாசானாவார். தமிழ்நெறி வழியில் தமிழர் வாழ்வியல் விழாக்கள் அனைத்தையும் நடத்துவதற்கு வழிகாட்டும் நூல்களை எழுதியதோடு தானே முன்னின்று 4,500க்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திக் காட்டி தமிழர் மரபை மீட்டெடுத்த பண்பாட்டுப் பேரறிஞராகவும் விளங்கியராவார். இத்தோடு, விடுதலைப்புலிகள் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த தமிழீழப்பற்றாளராகவும் திகழ்ந்தார்.

தமிழுக்காகவும், தமிழ்ப்பண்பாட்டுக்காகவுமாகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்திட்ட அப்பெருந்தகையின் மறைவு, ஒட்டுமொத்த தமிழ் கூறும் நல்லுலகிற்கே ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

தமிழுக்குத் தொண்டூழியம் செய்து வாழ்வதையே வாழ்நாள் பயனெனக் கருதி வாழ்ந்து மறைந்த ஐயா இளங்குமரனார் அவர்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் அவரது புகழ் அழியாது என்றும் நிலைத்து நிற்கும் பெருமைக்குரியது.

அத்தகைய பெருமகனாரை அங்கீகரித்து கௌரவிக்க, உரிய அரசு மரியாதையுடன் ஐயாவை நல்லடக்கம் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response