ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் – ஷிகர்தவானுக்கு பாராட்டுகள்

இலங்கை மட்டைப்பந்து அணிக்கு எதிராக நேற்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணித்தலைவராக இருக்கும் ஷிகர்தவான், 95 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றி பெறச் செய்தார்.

இதில் ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களை அவர் கடந்தார்.

இதனால்குறைந்த இன்னிங்ஸில் 6000 ஒருநாள் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 4வது வீரர் ஆனார் ஷிகர் தவான். இந்திய அணியைப் பொறுத்தவரையில் விராட் கோலிக்குப் பிறகு குறைந்த இன்னிங்சில் 6000 ரன்கள் மைல்கல்லை எட்டியவர் ஷிகர் தவான்.

கோலி 136 இன்னிங்ஸ்களில் 6000 ரன்கள் மைல்கல்லை எட்ட ஷிகர் தவானுக்கு 140 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. கோலியின் 136 இன்னிங்ஸ் 6000 ரன்கள் மைல்கல் உலகின் இரண்டாவது அதிவேக 6,000 ரன்களாகும்.

தென் ஆப்பிரிக்காவின் அற்புத வீரர் ஹஷிம் ஆம்லா 123 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களை ஒருநாள் போட்டிகளில் எடுத்து முன்னிலை வகிக்கிறார்.

அதே போல் ஒருநாள் சர்வதேசப் போட்டி கேப்டன்சி அறிமுகப் போட்டியில் அரைசதம் எடுத்த 6வது வீரர் ஆனார் ஷிகர் தவான்.

இவருக்கு முன்னால், அஜித் வடேகர், ரவிசாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அஜய் ஜடேஜா, எம்.எஸ். தோனி ஆகியோர் இதே சாதனையைப் புரிந்துள்ளனர்.

தவான் 2010-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாஇ 143 போட்டிகளில் ஆடியுள்ளார். 34 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் தவான் ஆடியுள்ளார்.

நேற்று முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை நன்றாக வழிநடத்தினார் என்கிற பாராட்டுகளும் அவருக்குக் கிடைத்துவருகிறது.

Leave a Response