நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017 டிசம்பர் 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிசம்பர் 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறினார். ஆனால், தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என 2021 ஜனவரி 11 அன்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையடுத்து, சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். சமீபத்தில் அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 12) அவர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக செய்தி வெளியானது.
அதன்படி, இன்று காலை போயஸ்கார்டனில் உள்ள தன் இல்லத்திலிருந்து அவர் நிர்வாகிகளை சந்திக்கப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “அரசியலுக்கு வரப்போவதில்லை, வர முடியவில்லை என சொன்ன பிறகு, மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்களைச் சந்திக்க முடியவில்லை. ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிய காலதாமதமானது. படப்பிடிப்பை முடித்த பின், தேர்தல், பிறகு கொரோனா வந்துவிட்டது.
மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு, இப்போது வந்திருக்கிறேன். மக்கள் மன்றத்தின் பணி என்ன என்பது குறித்து நிர்வாகிகள், ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்ற கேள்விகள் உள்ளன. நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுத்துவிட்டு அது குறித்து தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார்.
அதன்பின் ராகவேந்திரா மண்டபம் சென்றார் ரஜினிகாந்த். அங்கிருந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
காலச்சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை.ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்புபோல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.