எஸ் பி ஐ வங்கியின் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமல் – வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

ஏ.டி.எம் அல்லது தங்களது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால், சேவைக் கட்டணம் விதிக்கப்படும் என, எஸ்.பி.ஐ எனப்படும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.

இந்தப் புதிய கட்டண முறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது….

எஸ்.பி.ஐ – ஏ.டி.எம்.,கள் அல்லது கிளைகளில் மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐந்தாவது பரிவர்த்தனை முதல், சேவைக் கட்டணமாக, 15 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள் 10 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகத்தைப் பெற, 40 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். 25 பக்கங்கள் அடங்கிய காசோலை புத்தகம் தேவைப்பட்டால், 75 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும்.

மூத்த குடிமக்களுக்கு காசோலைப் புத்தகத்திற்கான புதிய சேவைக் கட்டண விதியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண முறை, நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் டிஜிட்டல் மயம் என்று ஆக்கிவிட்டு அதன்பின் ஒவ்வொன்றுக்கும் சேவைக்கட்டணம் என வசூலிப்பது பகல் கொள்ளையாக இருக்கிறது என்று வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியுடன் சொல்கிறார்கள்.

Leave a Response