மேலும் 2 ஏடிஎம் களில் கொள்ளை – சென்னையில் பரபரப்பு

சென்னையில் கடந்த 18 ஆம் தேதி இராமாபுரம் வள்ளுவர் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் சுமார் 15 இலட்சம் வரை வடமாநிலக் கொள்ளையர்கள் நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்றனர். அதேபோல் விருகம்பாக்கம் சின்மயா நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையம், வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஏ.டி.எம். மையம், தரமணி, சென்னை பாண்டி பஜார் ஆகிய இடங்களில் கடந்த 18 ஆம் தேதி வடமாநிலக் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருந்தனர்.

இது தொடர்பாக அந்தந்த காவல்நிலையங்களில் புகார் செய்யப்பட்டு தனிப்படையானது டெல்லி சென்று தற்போது ஒருவரைக் கைது செய்திருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் கொள்ளையடிக்கப்படுவதாக காவல்நிலையத்திற்கு தொடர் புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

நேற்று வரை 16 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் வந்த நிலையில் தற்போது சென்னையில் மேலும் 2 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை பெரியமேடு – வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் ரூ.16 இலட்சம் கொள்ளைபோயுள்ளது. ஜூன் 15 – 17ம் தேதி வரை 190 முறை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.16 இலட்சம் நூதன முறையில் திருடுபோயுள்ளது.

இதையடுத்து ஏ.டி.எம். மையத்தின் சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போது பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. பெரியமேடு எஸ்.பி.ஐ. கிளை மேலாளர் நேற்றிரவு ஏ.டி.எம். சென்று சோதனை செய்தபோது தெரியவந்துள்ளது. பெரியமேடு எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வங்கி மேலாளர் புகார் அளித்தார்.

இது தொடர்பான சி.சி.டி.வி. பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதேபோல் சைதாப்பேட்டையில் உள்ள ஏ.டி.எம்.-ல் ரூ.4.99 இலட்சம் பணத்தை நூதன முறையில் திருடியுள்ளனர். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்து வரும் புகார்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response