தமிழ்நாடு காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்கும் சைலேந்திரபாபு வாழ்க்கைப் பாதை

தமிழகக் காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக திரிபாதி உள்ளார். இவர், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. இதனால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு (ரயில்வே), கரன்சின்ஹா (தீயணைப்புத்துறை), சஞ்சய்குமார் (எல்லை பாதுகாப்புப் படை) ஆகியோரது பெயர்களை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவர்களது பெயர்களை தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களைப் பரிசீலித்த தமிழக அரசு, சைலேந்திரபாபுவை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்து நேற்று மாலை உத்தரவிட்டது.

இன்று (புதன்கிழமை) பகல் 12 மணி அளவில் சைலேந்திரபாபு தமிழகத்தின் 30 ஆவது டி.ஜி.பி.யாக பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, திரிபாதி விடைபெறுகிறார்.

இவர், பதவி ஏற்ற நாள் முதல் 2 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார். சைலேந்திரபாபுவின் பதவிக்காலம் 2022 ஜூன் மாதத்துடன் முடிகிறது. ஆனால் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டதால், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி அவர் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவியில் நீடிப்பார்.

சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்ட சைலேந்திரபாபுவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 1962 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தார். நடுத்தர குடும்பம் இவருடையது. இவரது தந்தை செல்லப்பன். இராணுவத்தில் பணியாற்றி விட்டு, பின்னர் கேரள போக்குவரத்துத் துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் மறைந்து விட்டார். இவரது தாயார் இரத்தினம்மாள். தற்போது அவருக்கு 92 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து, அவரே சமைத்துச் சாப்பிடுகிறார்.

சைலேந்திரபாபு வேளாண்மைப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சட்டப்படிப்பும் படித்துள்ளார். குற்றவியல் பிரிவில் பி.எச்.டி. முடித்துள்ளார். இவர் பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரில் அரசுப் பள்ளியில், தமிழ் வழியில் படித்தார். இவர் முன்னாள் இராணுவ வீரர்கள் அமைப்பின் உதவியோடு பட்டப்படிப்பும், வேளாண்மைப் பல்கலைக்கழக உதவியோடு பட்டமேல்படிப்பும் முடித்தவர்.

புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்கவிருக்கும் சைலேந்திரபாபு காவல்துறையில் ஆற்றிய சாதனைகள் ஏராளம் என்கின்றனர்.

தனது 25 ஆவது வயதில் ஐ.பி.எஸ்.அதிகாரியாகத் தேர்வு பெற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உதவி காவல் கண்காணிப்பாளராக தமிழக காவல்துறையில் 1989 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்தார். அதன் பிறகு தர்மபுரி, சேலம் நகரம் ஆகிய பகுதிகளிலும் உதவி காவல்கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் காவல்கண்காணிப்பாளராக 1992 இல் பொறுப்பு வகித்தார். அப்போது பிரபல ரவுடி வெடிகுண்டு நாகராஜன் என்பவரை நேருக்கு நேர் துணிச்சலாக வீட்டுக் கதவை உடைத்துச் சென்று பிடிக்க முற்பட்டார். நாகராஜன் வெடிகுண்டுகளை சைலேந்திரபாபு மீது வீசினார். அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு, நாகராஜனை சுட்டு வீழ்த்தினார்.

செங்கல்பட்டு கிழக்கு, கடலூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த போது, கெண்டகிருஷ்ணய்யா என்ற பிரபல ஆந்திர மாநில கொள்ளையனை அவனது சொந்த கிராமத்துக்கே சென்று அவரை சுட்டுத்தள்ள அதிரடி நடவடிக்கை எடுத்தார். கெண்ட கிருஷ்ணய்யா அவரது காலில் விழுந்து, இனிமேல் தமிழகம் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.

பிரபல ரவுடி கேட் ராஜேந்திரனின் கொட்டத்தை அடக்கினார். வடசென்னை இணை ஆணையராகப் பணியாற்றிய போது, ரவுடி ஒருவரை என்கவுண்ட்டர் முறையில் சுட்டுத் தள்ளினார். பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து நிறைய பேர் இறந்த போது, விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையிலும், ஏரி அருகே நாற்காலி போட்டு உட்கார்ந்து மீட்புப் பணியை முன்னின்று நடத்தினார்.

இவர் சென்னையில் இணை ஆணையராகப் பதவியில் இருந்தபோது,காவல்துறை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதன் முதலாக வேலை வாய்ப்பு முகாமை நடத்தினார்.

கோவையில் காவல் ஆணையராகப் பணியாற்றி உள்ளார். அப்போது சிறுமியைக் கற்பழித்துக் கொலை செய்த காமுகனை என்கவுண்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தி கோவை மக்களிடம் அசைக்க முடியாத நன்மதிப்பைப் பெற்றார்.

காவல் அதிகாரிகளிலேயே பொதுமக்களால் கட்-அவுட் வைத்து வரவேற்புப் பெற்றவர் என்று இவரைக் குறிப்பிடலாம். வடக்கு மண்டல ஐ.ஜி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சிறைத்துறை மற்றும் ரெயில்வே துறையிலும் கூடுதல் டி.ஜி.பி.யாக பணிபுரிந்துள்ளார். அவரது எண்ணற்ற சாதனைகளுக்குக் கிடைத்த பரிசுதான் காவல்துறைத்தலைவர் பொறுப்பு என்று பலரும் பாராட்டுத் தெரிவித்துவருகிறார்கள்.

Leave a Response