புதிய பதவியை ஏற்க மறுத்த கிரிஜா வைத்தியநாதன் – காரணம் இதுதான்

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வின் நிபுணத்துவ உறுப்பினர் பதவிக்குக் கடந்த ஆண்டு இறுதியில் தேர்வானார் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.

அவர்,அப்பதவிக்குரிய தகுதியோ அனுபவமோ இல்லை என்று கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி. சுந்தர்ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நிபுணத்துவ உறுப்பினராக இருப்பவர், சுற்றுச்சூழல் பணியில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்சம் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும் என்று என்ஜிடி விதிகளில் உள்ளதாகக் கூறி சுந்தர்ராஜன் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அந்தப்பதவியைக் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கிரிஜா வைத்தியநாதன் ஏற்கவிருந்த நிலையில், மறுஉத்தரவு வரும்வரை புதிய பதவியை ஏற்க கிரிஜா வைத்தியநாதனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இருப்பினும், அடுத்து நடந்த விசாரணைகளின்போது, கிரிஜா வைத்தியநாதன் மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்தபோது சுற்றுச்சூழல் விவகாரங்களைக் கவனித்தவர் என்றும் தமது அரசுத்துறை அனுபவத்தில் சுற்றுச்சூழல் துறைச் செயலாளராக அவர் பதவி வகித்துள்ளார் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்று, கிரிஜா வைத்தியநாதனுக்கு நிபுணத்துவ உறுப்பினர் பதவியை வகிக்க தகுதி இருப்பதாகக் கூறி உயர் நீதிமன்றம் கடந்த 18ஆம் தேதி உத்தரவிட்டது.

தீர்ப்பு சாதகமாக வந்த நிலையில், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினர் பதவியை ஏற்க கிரிஜா வைத்தியநாதன் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து அந்தப்பதவிக்கு கே.சத்யகோபால் என்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

எதற்காக அந்தப்பதவியை ஏற்கவில்லை என்பது குறித்த கருத்தை அவர் வெளியிடவில்லை.

அவர் சொல்லாவிட்டாலும் அவர் விலகியதற்குக் காரணம்,முன்னாள் தமிழ்நாடு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனின் பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினர் நியமனம் செல்லும் என்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளோம். விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிவித்துள்ளதுதான்.

அதனால்தான்,இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தபோதும், உச்சநீதிமன்றத்தில் அதற்கு எதிராகத் தீர்ப்பு வரும் என்கிற அச்சம் காரணமாகவே, புதிய பதவியை ஏற்காமல் கிரிஜா வைத்தியநாதன் தவிர்த்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response