மோடி அமித்ஷாவின் கொடுமதி கொண்ட இழிசெயல் – சீமான் கடும் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,

30 கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேசியக் கல்விக் கொள்கையின் மொழிப்பெயர்ப்பில் தமிழ்மொழி இல்லாது புறக்கணிப்புச் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உயர்தனிச் செம்மொழியாகவும், எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளுள் தலையாய மொழியாகவும் இருக்கிற தமிழ்மொழியை முற்றாகப் புறக்கணித்து மொழிப்பெயர்ப்புச் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை மத்தியப் பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு, நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்விக்கொள்கையை வடிவமைக்கும் மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கையும், ஒற்றைமயப்படுத்தும் காவிக்கொள்கையையும் வன்மையாகக் கண்டித்து, வீரியமாக அதனை எதிர்த்துக் கொண்டிருக்கிற வேளையில் அக்கல்விக்கொள்கையை மொழிப்பெயர்த்து வெளியிடுதலில்கூடத் தமிழ்மொழி இல்லாது புறக்கணித்திருப்பது மத்தியில் ஆளும் பாஜக அரசின் வெளிப்படையான தமிழர் விரோதப்போக்காகும். இது அதிகாரத்திமிரிலும், அரசாட்சி தன்வசமிருக்கும் மமதையிலும் தமிழுக்கும், தமிழர்க்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க முயலும் ஆணவத்தின் வெளிப்பாடேயாகும்.

ஒரு மொழிப்பெயர்ப்பில் ஒப்புக்குக்கூடத் தமிழைச் சேர்க்க மறுக்கும் மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள், இக்கல்விக்கொள்கையைச் செயல்படுத்தினால் அதில் தமிழ் மொழி உள்ளிட்ட தேசிய இனங்களின் மொழிகளுக்கு எத்தகைய முதன்மைத்துவம் அளிப்பார்கள் என்பதற்கு இந்நடவடிக்கையே மிகச்சிறந்த சான்றாகும். இக்கல்விக்கொள்கையை எதிர்க்க வேண்டும் என்பதற்கான தார்மீக நியாயத்திற்கு மத்திய ஆட்சியாளர்களே மீண்டும் மீண்டும் வலுசேர்க்க முனைகிறார்கள். ஆகவே, இக்கல்விக்கொள்கை என்பது தமிழர் உள்ளிட்ட இந்திய ஒன்றியத்திலுள்ள அத்தனை தேசிய இனங்களுக்கும் எதிரானது என்பதை உளமாற உணர்ந்துகொள்கிறோம். பல்வேறு தேசிய இனங்கள் சங்கமித்து வாழும் ஒரு நாட்டில் ஒரே மாதிரியான கல்விக்கொள்கையை வடிவமைக்க முயல்வது ஆகப்பெரும் மோசடித்தனம் என்பதினாலேயே அக்கல்விக்கொள்கையைத் தொடக்கத்திலிருந்தே மிகக்கடுமையாக எதிர்க்கிறோம்

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் தமிழில் சில வார்த்தைகளைப் பேசி, திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று வாக்குப்பிச்சை எடுக்க முயலும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் தலைவர் பெருமக்கள், ஆட்சி முறைமைகளிலும், நிர்வாகச்செயல்பாடுகளிலும் தமிழைத் திட்டமிட்டே புறக்கணித்து, தமிழர்களை அவமதித்து வருவது தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டிப் பார்க்கும் கொடுமதி கொண்ட இழிசெயலாகும். அற்ப அரசியலுக்காகத் தமிழைப் பேசிவிட்டு, செயல்பாடுகளில் தமிழைத் தொடர்ச்சியாக அவமதித்து, புறக்கணித்து வருவது ஆறா சினத்தையும், தீரா வன்மத்தையும் தமிழர்களின் நெஞ்சில் ஆழ விதைத்து வருகிறது. இதற்கான எதிர்விளைவுகளையும், வரலாற்றுப் படிப்பினைகளையும் கட்டாயம் பாஜக அரசு அறுவடை செய்யும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response