தமிழீழத்திலிருந்து நடிகர் விவேக்குக்கு வந்த இறுதி வணக்கம்

மயங்கிய நிலையில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணியளவில் உயிரிழந்தார்.

தமிழ்த் திரையுலகமும் தமிழகமும் மட்டுமின்றி உலகத்தமிழர்களும் அவருக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்திக் கொண்டுள்ளனர்.

தமிழீழத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள இரங்கற் குறிப்பில்….

நடிகர் விவேக் அவர்கள் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பிச் சின்னக் கலைவாணர் என்று தமிழ்த் திரையுலகில் புகழ் பெற்றவர். வெள்ளித் திரையில் கிடைத்த புகழைக் கட்டாந்தரையில் மரங்களை நடுகை செய்வதற்குப் பயன்படுத்திப் பசுமைக் காவலர் என்று பெயர் பெற்றவர். அவர் புகழுடம்பு மறைந்தாலும் அவர் நாட்டிய மரங்களால் எம் நினைவில் என்றென்றும் வாழ்வார்.

நடிகர் விவேக் நகைச்சுவையில் தனக்கெனத் தனியான பாணியை உருவாக்கியவர். இரசிகர்களைச் சிரித்துவிட்டு மட்டும் போகாமல் சிந்திக்கவும் தூண்டியவர். சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூட நம்பிக்கைகளைக் களைவதற்குத் தன் நடிப்பாற்றலால் விழிப்புணர்வு ஊட்டியவர்.நிழலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சீர்திருத்தக் கருத்துகளின் பரப்புரையாளராக சளைக்காது பணியாற்றியவர்.

பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவுரைப்படி சூடாகும் பூமியைக் குளிர்விக்கும் நோக்கில் ஒருகோடி மரங்களை நடுகை செய்யும் பணியை ஆரம்பித்தவர். கிறீன் கலாம் என்ற அமைப்பை நிறுவி அதனூடாக முப்பத்து மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடுகை செய்த நிலையில் மரணம் அவரை அரவணைத்துக் கொண்டது.

மரங்களை நடுகை செய்பவர்களின் நினைவுகளுக்கு மரணம் இல்லை. அவர்கள் நடுகை செய்த மரங்களாலும், அம்மரங்களிலிருந்து வீழ்ந்து பரவும் விதைகளின் துளிர்ப்பாலும் சந்ததிகள் கடந்தும் அவர்கள் நினைவிற்கொள்ளப்படுவார்கள். விவேக் அவர்களின் நாமமும் பசுமை உலகில் அழியாது நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response