மீண்டும் ரஜினியை கேவலப்படுத்திய கமல் – இரசிகர்கள் கோபம்

ஏப்ரல் 1 ஆம் தேதி நடிகர் ரஜினிக்கு,திரைத்துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை அறிவித்தது மத்திய அரசு. இது தொடர்பான அறிவிப்பு வெளியானவுடன் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இந்த வாழ்த்தால் நெகிழ்ந்த ரஜினி, இந்த விருதினை தன்னோடு பயணித்தவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

ரஜினிக்கு பால்கே விருது அறிவிக்கப்பட்டவுடன், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தனது சமூக வலைதளத்தில் பதிவொன்றை வெளியிட்டார் கமல். அதில், “உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த ட்வீட் ரஜினி இரசிகர்களைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. கமல் மனதில் எவ்வளவு வன்மம் என்று பலரும் அவரைக் கடுமையாகச் சாடினார்கள். இதற்கு கமல் இரசிகர்களும் பதில் கருத்து பதிவிட்டு வந்தார்கள்.

இந்த சர்ச்சை குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் கமல். அந்தப் பேட்டியில் ரஜினிக்கு வாழ்த்து குறித்த ட்வீட்டையும், அதன் மீதான விமர்சனம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கமல் கூறியதாவது:

அதில் என்ன விமர்சனம் இருக்கிறது? திரையில் தோன்றினாலே இரசிகர்களை வென்றெடுப்பது என்பது எத்தனை பேரால் முடியும். திரையில் தோன்றினாலே பாராட்டு என்பது ஒருவிதமான ஆளுமைதானே.

அதைப் பலரும் வெவ்வேறு வழியில் புரிந்து கொண்டால் நான் என்ன பண்ண முடியும்? நான் இப்படியொரு ஆளே இல்லை என்கிறேன். அப்படியும் புரிந்து கொள்ளுங்கள். நான் அவ்வளவு கஷ்டப்பட்டுச் செய்வதை, அவர் வந்தாலே நடக்கிறது. அதில் என்ன தவறாக இருக்க முடியும்?

எனக்கு பால்கே விருது கொடுக்கவில்லையே என்ற எண்ணமெல்லாம் இல்லை. பால்கே விருது வாங்கினால்தான் திறமையாளர் என்று இல்லை. எனக்கு பால்கே விருது கொடுக்கவே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ரஜினிக்கு ஒருவேளை இந்த ஆண்டு கொடுக்கவில்லை என்றால், அவருடைய பெருமை எந்த விதத்தில் குறைந்துவிடுகிறது.

அவருக்குக் கொடுக்கிறார்கள், எனக்குக் கொடுக்கவில்லை என்றெல்லாம் கிடையாது. எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டபோது, என்னை விட தகுதியானவர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அந்த வருடம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை அவ்வளவு தான்.

ரஜினி – கமல் ஆகியோரை விட்டுவிடுங்கள். இன்னும் எத்தனையோ பேர் விருதுக்குத் தகுதியானவர்கள் இருக்கிறார்கள். எங்கள் இருவரை வைத்து விளையாடுவது மீடியாவுக்குப் பிடிக்கும். நான் சமூக வலைதளத்தையும் மீடியா என்கிறேன்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேட்டியிலும் ரஜினி நல்ல நடிகர் என்று கமல் ஓப்புக்கொள்ளவில்லை.இவ்வளவு நீட்டி முழக்காமல் அவர் நல்ல நடிகர் என்பதில் மாற்றமில்லை என்று சொல்லியிருக்கலாம். அதோடு பால்கே விருது வாங்கினால்தான் திறமையாளர் என்று இல்லை எனச் சொல்லியிருப்பதன் மூலம் மேலும் ரஜினியைக் கேவலப்படுத்திவிட்டார் கமல் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Leave a Response