ஒரே மேடையில் திமுக கூட்டணித் தலைவர்கள் – அதிமுக கூட்டணிக் கூட்டம் எப்போது?

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சித் தலைவர்களின் பரப்புரைகளும் விறுவிறுப்படைந்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு காங்கேயம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து காங்கேயம் தொகுதியிலும், காலை 10 மணிக்கு அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், பவானி, பவானிசாகர் சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஈடுபடுகிறார்.

மாலை 4 மணிக்கு சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மதன்லால் மைதானத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, வீரபாண்டி, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு தொகுதி ஆகிய 11 தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.

மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இதில் அகில இந்திய காங்கிரசு முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன்,கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநிலப் பொதுச் செயலாளர் கதிரவன், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் இரா.அதியமான், கிறித்துவ நல்லெண்ண இயக்கம் தலைவர் இனிகோ இருதயராஜ், மக்கள் விடுதலைக் கட்சி நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக, காங்கிரசு மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்திற்காக பிரமாண்டமான முறையில் மேடை, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டத்துக்குத் தலைவர்கள் வரும் பாதை மற்றும் மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்படுகின்றனர்.

தமிழகத் தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, திமுக தலைமையில் ஒரு கூட்டணி முதன்மைப் போட்டியில் இருக்கின்றன. இவ்விரு கூட்டணிகளில் திமுக கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பேசும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது.

அதுபோல அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பேசும் நிகழ்ச்சி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response