அதிமுக பாமக தேர்தல் கூட்டணிக்கு நிபந்தனையாக வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு.
இது தொடர்பாக மூன்று கட்டங்களாக அமைச்சர்கள் குழுவுடன், பாமக தலைவர் தலைமையிலான குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,அமைச்சர் வேலுமணி ஆசியுடன் 2020 டிசம்பரில் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்படும் அமைப்பு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான கூட்டமைப்பு. அதன் தலைவர் இரத்தினசபாபதி, துணைத் தலைவர் வெள்ளிங்கிரி ஆகியோர் கோவையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது….
தமிழக அரசில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (பி.சி.) 26.5 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (எம்.பி.சி.) 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 19 சதவீதம், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் என மொத்தம் 69 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.
இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர் சமூகத்தினர் தான் கல்வி, வேலைவாய்ப்புகளில் அதிக சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள்.
அந்தப் பிரிவில் உள்ள இதர சமூகத்தினர் சலுகைகளைப் பெறுவதில்லை. இந்த நிலையில் வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவது பாரபட்சமாகும்.
ஒரு சமூகத்துக்கு மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள கொங்கு வேளாளர், நாடார், தேவர், முதலியார், யாதவர், செட்டியார் உள்பட 137 சமூகத்தினருக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 4 கோடி பேர் உள்ளனர்.
ஒவ்வொரு சமுதாயத்தினரும் தனித்தனியாக இடஒதுக்கீடு கேட்டால் அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகம் கலவர பூமியாக மாறி விடும். அந்த நிலையை தமிழக அரசு ஏற்படுத்தக்கூடாது.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி மற்ற சமூகத்தினரை தமிழக அரசு அழைத்துப் பேசியிருக்க வேண்டும். ஆனால் மற்ற சமூகத்தினரிடம் கருத்து கேட்காமல் இடஒதுக்கீடு வழங்குவது ஒருதலைப்பட்சமானது.
தற்போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த குலசேகரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிஷன் கணக்கெடுப்பை சரியாக நடத்த வேண்டும். எனவே வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.
சாதி வாரி கணக்கெடுப்பைச் சரியாக நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும். எங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அடுத்தகட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இவர்கள் கூற்றுப்படி பாமகவின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது போல் தெரிகிறது. அதேசமயம் இவர்களின் போராட்ட அறிவிப்பு மற்றும் நீதிமன்றத்தை நாடுவோம் என்கிற தகவல் ஆகியனவற்றைப் பார்க்கும்போது கொடுப்பது போலக் கொடுத்து பின்பு அதற்குத் தடை ஏற்படுத்தும் முயற்சி என்கிறார்கள்.
என்ன நடக்கிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.