சசிகலா மீது காவல்துறையில் புகார்

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, சனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் குணமாகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களுருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் இருந்து சசிகலா சனவரி 31 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் புறப்பட்டார்.இந்த வாகனம் ஜெயலலிதா பயன்படுத்திய வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்ததற்கு அதிமுகவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி பகுதி அ.தி.மு.க. துணைச் செயலாளர் வினாயகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரைச் சந்தித்து ஒரு புகார் அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கினார். இந்த நிலையில் சசிகலா தனது காரில் அ.தி.மு.க. கட்சிக்கொடியை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி உள்ளார். இது கண்டனத்துக்குரியது.

எனவே அ.தி.மு.க. கட்சிக்கொடியை பயன்படுத்திய சசிகலா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதி்ல் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Response