முக.அழகிரி பேச்சு – எதிர்ப்பாளர்கள் ஏமாற்றம்

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி இன்று ஜனவரி 3ஆம் தேதி தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் பற்றி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மதுரை பாண்டி கோவில் பகுதியில் உள்ள துவாரகா பேலஸ் மண்டபத்தில் இன்று (ஜனவரி 3) மாலை 4 மணிக்கு அழகிரி ஆதரவாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதை ஒட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை முதலே மதுரையில் முகாமிடத் தொடங்கினார்கள்.

சத்யசாய் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று மாலை ஐந்து மணிக்குமேல் புறப்பட்டார் அழகிரி. வழக்கமான தனது காரில் புறப்படாமல் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் பரப்புரை வேனில் ஏறி மண்டபத்துக்கு கிளம்பினார்.

அழகிரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற போது பயன்படுத்திய தேர்தல் பரப்புரை வாகனம் என்பதால் சென்டிமென்டாக அந்த வாகனத்தை இப்போது தனது ஆலோசனைக் கூட்டத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார். வாகனத்திற்குள் அவரது மகன் துரை தயாநிதியும் அமர்ந்திருந்தார். டெம்போ ட்ராவலரைப் பார்த்த அழகிரி ஆதரவாளர்கள் உற்சாகமாகி விட்டனர். மீண்டும் தேர்தலை நோக்கி திரும்புவதற்கான சிக்னலாக தான் அழகிரி இந்த வாகனத்தை மீண்டும் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார் என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

இன்று மாலை ஐந்து மணிக்குமேல் ஆலோசனை தொடங்கிய நிலையில் 6.30 மணி வாக்கில் உரையாற்றினார் அழகிரி. அப்போது அவர் திமுக தலைவர் ஸ்டாலினைக் கடுமையாகத் தாக்கினார்.

“ திராவிட முன்னேற்றக் கழகத்துக்காக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். திருமங்கலம் தேர்தல் நடக்கும்போது மதிய உணவுக்காக நான் ஸ்டாலின், எம்.ஆர்.கே, பொன்முடி, நேரு என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் பேசிவைத்துதான் வந்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என்னிடம், “எப்படியாவது தலைவரிடத்திலே சொல்லி ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வாங்கித் தர வேண்டும்’ என்று சொன்னார்கள். நான் உடனே, ‘அதுல என்ன… இப்பவே சொல்றேனே?” என்று கேட்டு உடனே அலைபேசியை எடுத்து அப்பாவிடம் பேசினேன். என்னப்பா என்றார். ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று சொன்னேன். உடனே நிறைவேற்றினார்.

நான் தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆனதால் அவர் பொருளாளர் ஆகவேண்டுமாம். ஆனால் எனக்கு அப்படி எந்த உணர்வும் இல்லை.

திருமங்கலம் தேர்தலில் நேரத்திலே இன்னொரு நாள் இரவு என் வீட்டில் ஸ்டாலின், அவரது மனைவி இன்னும் இருவர் உள்ளிட்டோர் சாப்பிட வந்தார்கள். அப்போது நான் ஸ்டாலினிடம், ‘அபபாவுக்கு பிறகு நீதான் எல்லாம். உனக்காக நான் பாடுபடுவேன்’என்று சொன்னேன். இது அண்ணாவின் மீது கலைஞர் மீது ஆணை. இதை அவர் மறுக்க முடியுமா? ஆனால் அவர் ஏன் இப்படி எனக்கு துரோகம் செய்கிறார் என்று தெரியவில்லை.

நான் மத்திய அமைச்சரானதும் அவரது அந்தஸ்துக்கு வரவேண்டுமென்று நினைத்திருக்கிறார். நான் மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் என்றேன். ஆனாலும் தலைவர் எனக்கு அளித்தார். அடுத்த நாள் தலைவர் பிறந்தநாள். சென்னை வந்து அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தேன். அப்போது தனியாக பேச வேண்டுமென்று தலைவர் அழைப்பதாகச் சொன்னார்கள். உள்ளே சென்றேன். அப்பா என்னிடம், ‘‘ஒண்ணுமில்லப்பா… உன் தம்பி துணை முதலமைச்சர் பதவி கேட்குறான். கொடுக்கலாமா?’என்று கேட்டார். ‘இதுக்கு என்னைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லைப்பா. நீங்கள் வளர்த்த கட்சி. நீங்களே முடிவெடுங்கள்” என்று சொன்னேன். நான் மத்திய அமைச்சர் ஆகிவிட்டதால் துணை முதல்வர் பதவி கேட்டார் ஸ்டாலின்.

நான் தொண்டனுக்காக வாதாடினேன். ஒன்றிய, கிளை கழக தேர்தல், ஒரு சில மாவட்டங்களில் உறுப்பினர் ஃபாரம் பதிந்திருக்கிறார்கள். வாக்காளர் பட்டியலை வாங்கி அப்படியே அதை உறுப்பினர் ஃபாரம் ஆக்கி அதில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எடுத்துப் போய் கலைஞரிடம் காட்டினேன். அவர் அமைப்புச் செயலாளராக இருந்த கல்யாண சுந்தரத்தைக் கூப்பிட்டு என்னப்பா இது என்று விசாரித்தார்.

நடவடிக்கை எடுப்பார் என்று நம்பி வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன். மீண்டும் என் பிறந்தநாளுக்காக நான் திரும்பி வரும்போது, என் ஆதரவாளர்கள், ‘பொதுக்குழுவே வருக ‘ என்று போஸ்டர் அடித்தனர். அதற்காகவே அவர்கள் நீக்கப்பட்டனர். நீ போஸ்டர் அடிக்கவில்லையா? உனக்கு வருங்கால முதல்வர் என்று போஸ்டர் அடிக்கவில்லையா? போஸ்டர் மட்டும்தான் அடிக்க முடியும். என் ஆட்கள் ஆதரவாளர்கள் உன்னை (ஸ்டாலினை) முதல்வராக விட மாட்டார்கள்.

நான் நீக்கப்பட்ட பிறகு கலைஞரைச் சந்தித்தபோது, ‘என்னை எப்போது சேர்த்துக் கொள்வீர்கள் என்று கேட்டேன். ‘இரு அவர்களின் ஆட்டம் அடங்கட்டும்’ என்று சொன்னார். ஆனால் அதன் பின் அவர் படுத்துவிட்டார்.

ஏழு வருடமாக சும்மாதான் இருக்கிறேன். இப்போது என் ஆதரவாளர்கள் இங்கே நிறைய பேசியிருக்கிறார்கள். நான் நல்ல முடிவெடுப்பேன். அது நல்ல முடிவாகவோ அல்லது கெட்ட முடிவாகவோ கூட இருக்கலாம். எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். எத்தனையோ பேரை மந்திரியாக்கியிருக்கிறேன். எவனுக்கும் நன்றி கிடையாது. ஆனாலும் உங்களுக்காக ஒரு தொண்டன் அழகிரி இருக்கிறான்

இவ்வாறு அழகிரி பேசினார்.

ரஜினி கட்சி தொடங்க மறுத்தவுடன் மு.க.அழகிரியை தனிக்கட்சி தொடங்க வைக்க திமுக எதிர்ப்பாளர்கள் முயன்றதாகவும் அவர்கள் அழகிரி எதுவும் சொல்லாததால் ஏமாற்றமடைந்துள்ளனராம்.

Leave a Response