திடுமென மறைந்த இளவேனில் – சுபவீயின் அழ வைக்கும் இரங்கற் குறிப்பு

எழுத்தாளர் கவிஞர் திரைப்பட இயக்குநர் சமுதாயச் செயற்பாட்டாளர் எனப் பன்முக அடையாளம் கொண்ட இளவேனில் சனவரி 2 ஆம் நாள் திடுமென மறைந்தார்.

அவர் மறைவை ஒட்டி பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள இரங்கற் குறிப்பு…..

எப்படி இறந்தாய் இளவேனில்?
—————————–
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு-
கனிமுத்துப் பதிப்பகம் சார்பில், கவிஞர் இன்குலாப் நூல் ஒன்றை வெளியிட்ட போது, இளவேனிலிடம் அட்டைப்படம் கேளுங்களேன் என்றார். அதன்படி, இன்குலாப் அறிமுகம் செய்து வைக்க இளவேனிலைச் சந்தித்தேன். அதுதான் முதல் சந்திப்பு.

சில நாள்களில் அட்டைப்படத்தை வடிவமைத்துக் கொடுத்து விட்டார். சற்றும் தயங்காமல், அட்டைப்படத்திற்கு 500 ரூ கொடுங்கள் என்றார். அன்றைய நாள்களில் அது சற்று அதிகம் என்று பட்டது. எனினும் ஏதும் பேசாமல் அத்தொகையைக் கொடுத்து விட்டேன்.

ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, இன்னொரு நூலுக்கு அட்டைப்படம் கேட்டேன். வடிவமைத்துக் கொடுத்தார். 500 ரூ கொடுத்தேன். வேண்டாம், 200 ரூ போதும் என்றார் . சற்றுக் குழப்பமாக இருந்தது. அன்று 500 ரூ கேட்டீர்களே என்றேன். ஆம், அன்று எனக்கு 500 தேவைப்பட்டது. இன்று 200 போதும், செலவு ஏதும் இல்லை என்றார். நல்ல வேளை, உங்களுக்கு 2000 ரூ தேவைப்படும் நாளில் வராமல் தப்பித்தேன் என்றேன். இளவேனிலைப் பற்றிச் சொல்ல இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

1995 – 2000 கால கட்டத்தில், அய்யா அருணாசலம் அவர்கள்
தொடக்கிய தமிழ்ச் சான்றோர் பேரவையில், வெவ்வேறு விதமான திறமையாளர்கள் பலரும் ஒன்று கூடிப் பணியாற்றினோம். சிலம்பொலியார், தமிழண்ணல், முத்துக்கூத்தன், காசி ஆனந்தன், இலக்கிய வீதி இனியவன், புஷ்பவனம் குப்புசாமி, பெரியார்தாசன், திருக்குறள் கவனகர், தேனிசை செல்லப்பா, பொள்ளாச்சி உமாபதி, தேவநேயன், கலைவாணன் இளவேனில், நான் என்று ஒரு பன்முகப் படையின் ஒருங்கிணைப்பு அது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அடையாறு மாணவர் நகலகத்தில் அனைவரும் ஒன்று கூடி விடுவோம். மதியத்திற்குப் பின் வீடு திரும்பும்போது நாங்கள் இருவரும் ஒன்றாய்த்தான் பேசிக் கொண்டே வருவோம்.

2000 மார்ச்சில், நந்தன் இதழை விட்டு
நான் வெளிவந்த பின், இளவேனில்தான் அப் பொறுப்பை ஏற்று, 2002 வரையில் நடத்தினார்.
அவருடைய நூல்கள் வெளியீட்டு விழாக்களில் பேசுவதற்குத் தவறாமல் என்னை அழைப்பார்.

கலைஞர் தலைமையேற்று வெளியிட்ட “ஆத்மா என்றொரு தெருப் பாடகன்” நூல் வெளியீட்டு விழா தொடங்கி, “காருவகி’, “கார்க்கி என்னும் புயற் பறவை” எனப் பல நூல்களின் வெளியீட்டு விழாக்களிலும், என்னைப் பேசச் சொல்லிப் பெருமைப் படுத்தியுள்ளார்.

என் ” பகத்சிங்கும் இந்திய அரசியலும்” நூலுக்கு அவர் தந்த முன்னுரை அத்தனை நேர்த்தியானது.

எல்லா நண்பர்களையும் போல இல்லை, இவர் ஒரு வித்தியாசமான மனிதர். விரித்துச் சொன்னால் தனி நூலாகும்.

இறுதியாய், கடந்த நவம்பரில் அவருடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய “இங்கேயும் ஒரு பூ மலரும் ” நாவலைக் காரைக்குடியில் இருந்த போது படித்துக் கொண்டிருந்தேன். அதில் திடீரென்று என்னைப் பற்றிய செய்தி ஒன்றும் இடம் பெற்றிருந்தது. என் வாழ்வில் நடந்த, நான் அவரிடம் சொன்ன ஒரு சிறு நிகழ்வு அது.

உடனே அவருடன் தொலைபேசினேன். சிரித்தார். முழுவதும் படித்து விட்டுச் சொல்லுங்கள் என்றார். முழுவதும் படித்து விட்டேன். ஆனால் சொல்லவில்லை. பிறகு சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தேன். சந்திக்காமலேயே போய்விட்டார்.

இப்போது அந்த நூல், நண்பர் எழுத்தாளர் குமரன் தாசிடம் இருக்கிறது. இளவேனில் எங்கும் இல்லை.

அந்த நூலில், “வாழும் வரை மகிழ்ச்சி, இறக்கும் போது நிம்மதி ” என்று ஓர் இயலுக்குத் தலைப்பு கொடுத்திருந்தார்.

எப்படி இறந்தாய் இளவேனில்? இறக்கும் போது நிம்மதியாய்த்தானே?

– சுப.வீரபாண்டியன்

Leave a Response