வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி கையெழுத்து – இராகுல்காந்தி ஒப்படைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ள 2 கோடி கையொப்பங்களுடன் இன்று காலை இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தைச் சந்தித்து மனு அளித்து விவசாயிகள் போராட்டத்தில் தலையிடுமாறு கோர உள்ளனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தைச் சந்திக்க உள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அதை திரும்பப் பெறக் கோரியும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை 5 கட்டப் பேச்சு விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

வேளாண் சட்டங்கள் கொண்டுவந்த போதிருந்தே காங்கிரசுக் கட்சி தீவிரமாக எதிர்த்து வந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரசுக் கட்சி நாடுமுழுவதும் போராட்டங்களை நடத்தி இந்தச் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளது.

இந்தக் கையொப்பங்களுடன் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தைச் சந்திக்கும் காங்கிரசு நிர்வாகிகள், விவசாயிகள் போராட்டத்தில் உடனடியாகத் தலையிட்டு முடிவுக்குக் கொண்டுவரக் கோர உள்ளனர்.

இதுகுறித்து காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் கே.சுரேஷ் கூறியதாவது….

வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கடந்த 4 வாரங்களுக்கும் மேலாக கடும் பனியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் தலையிட்டு தீரத்து வைக்குமாறு குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்திடம் வலியுறுத்த உள்ளோம். இதற்காக நாடுமுழுவதும் 2 கோடி பேரிடம் கையொப்பம் வாங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.45 மணிக்கு விஜய் சவுக் பகுதியில் இராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி, இராகுல் காந்தி தலைமையில் காங்கிரசு நிர்வாகிகள் பேரணியாகச் சென்று குடியரசுத் தலைவரைச் சந்திப்பார்கள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Response