ஓ.பன்னீர்செல்வம் மீது கமல் தாக்குதல்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை தொடங்கினார். முன்னதாக பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தைப் பார்வையிட்டு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.இதனைத் தொடர்ந்து பிள்ளையார் பாளையம், கீழ் அம்பி பகுதிகளில் பரப்புரை செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்…

எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி டார்ச் லைட் சின்னம் வேண்டாம் எனக் கூறியுள்ள நிலையில் மீண்டும் சின்னத்தைப் பெற சட்டப் போராட்டம் நடத்துவோம். கட்சிகளில் நேர்மையாகச் செயல்பட முடியாமல் மற்ற கட்சிகளில் சிக்கித் தவிக்கும் நேர்மையாளர்களை மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது. மக்களுக்குத் தேவையான சேவைகளை அவர்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்போம். மக்கள் சேவைச் சட்டம் கொண்டுவரப்படும். தமிழகம் முழுவதும் மின்னணு இல்லங்கள் உருவாக்குவோம், இணைய வசதியை அடிப்படை உரிமையாக்குவோம். நவீன தற்சார்பு கிராமங்கள் உருவாக்குவோம் என்றார்.

காஞ்சிபுரத்தைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் நேற்று நடந்த சீரமைப்போம் தமிழகத்தை, நாளை நமதே என்ற நிகழ்ச்சியில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, நான் தனியார் டிவி நிகழ்ச்சியில் நிறைய சம்பளம் வாங்குவதாகச் சொல்கிறார்கள். அவ்வாறு வாங்கும் பணத்திற்கு நான் வட்டி கட்டும் விபரங்களை பத்து நிமிடத்தில் தர முடியும். டீ கடை வைத்திருந்தவர் கற்பனைக்கு எட்டாத பணத்தில் புரளுவது எப்படி?. இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?.

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

பெயர் குறிப்பிடாமல் கமல் பேசினாலும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் தாக்கிப் பேசினார் என்று மக்கள் புரிந்திருக்கிறார்கள்.

Leave a Response