ரேசன் கடை வேலைக்கு இவ்வளவு இலஞ்சம் – பதிவாளரிடம் புகார்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது….

தமிழகம் முழுவதும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், விற்பனை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தற்போது அனைத்து மாவட்டங்களிலும் நேர்காணல் நடந்து வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் வேலை என்றவுடன் பலரும் பல இலட்சம் ரூபாயை வைத்துக் கொண்டு இந்த வேலையைப் பிடிக்க போட்டா போட்டியிட்டு பணத்தை கொடுக்கத் தயாராக உள்ளனர்.

முதலில் இது அரசு வேலையே இல்லை. இது தெரியாமல், இளைஞர்கள் நியாயவிலைக் கடைகளில் வேலைக்குச் சேர்வதற்கு தமிழகம் முழுவதும் அரசியல் மற்றும் ஒரு சில நபர்கள் மூலமாக பல இலட்சம் ரூபாய் பேரம் நடப்பதாக அறிகிறோம்.

எனவே, ஆட்கள் தேர்வில் அரசியல் தலையீடு மற்றும் பண பேரமின்றி உண்மையான விண்ணப்பதாரர்களை கண்டறிந்து சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் விண்ணப்பதாரர்களை நேர்மையான முறையில் நியமனம் செய்வதை மாநில பதிவாளர் உறுதி செய்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் நியாய விலை கடை பணியாளர்கள் தேர்வுக்கு கூட்டுறவுத் துறை மூலம் நேர்காணல் நடத்தினாலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த முக்கிய புள்ளிகளுக்கு ரூ.6 இலட்சம் முதல் ரூ.8 இலட்சம் வரை வழங்கினால் மட்டுமே வேலை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Response