ஏழைச்சிறுவனை பிச்சை எடுக்கவைத்த கிராம நிர்வாக அதிகாரி இடைநீக்கம்

இறந்த தந்தையின் ஈமச்சடங்குக்கான அரசு உதவித் தொகையைப் பெற லஞ்சம் கொடுக்க முடியாத 15 வயது சிறுவன், ‘லஞ்சம் கொடுக்க நன்கொடை தாருங்கள்‘ என்று வசூல் செய்தது பரபரப்பாகியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் எம். குன்னத்தூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த லஞ்சத்துக்கான நன்கொடை வசூல் நடந்திருக்கிறது. அஜித் என்ற 15 வயது சிறுவனும் அவரின் நண்பர்களும் ஒரு போராட்டமாக இதனை நடத்தியுள்ளனர்.

அஜித்தின் தந்தை கொளஞ்சி 11 மாதங்களுக்கு முன்னர் இறந்துபோனார். அவரின் சிறுநீரகபிரச்சனை ஏற்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சை செய்ய அவர் குடும்பத்தினருக்கு வசதியில்லை. நிலமில்லை, உடமை என்று எதுவும் இல்லை.

ஒரு மாத வேதனைக்குப் பின்னர் அவர் இறந்துபோனார்.அவரின் குடும்பத்தினருக்கு மரணம் என்ற நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. கொளஞ்சியின் மனைவியும் பிள்ளைகளும் கணவர் இறுதிச் சடங்கு உதவி நிதியான 12,500 ரூபாய்க்கு விண்ணப்பம் செய்து காத்திருந்துவிட்டு பிழைப்பைப் பார்க்க மும்பை சென்றுவிட்டனர்.

கடந்த மாதம் ஈமச்சடங்குப் பணம் வந்துவிட்ட செய்தி மும்பைக்குப் போய்ச் சேர்ந்தது. குடும்பத்தின் ஆக இளைய பையன் அஜித்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அவர் ஊருக்கு வந்து அதிகாரிகள் பின்னால் அலைந்து ஒரு மாதம் போனது. அதன்பின், கிராம நிர்வாக அதிகாரி ரூபாய் 3,000 கொடுத்தால் பணம் கைக்குவரும் என்றிருக்கிறார்.

அஜித் உறவினர்களிடம் கேட்டு அலைந்து நொந்துபோயிருக்கிறார். பின்னர், நண்பர்களின் ஆலோசனை படி பிளக்ஸ் பேனர் தயார் செய்து, ‘லஞ்சம் கொடுக்க நிதி தாருங்கள்‘, என்று குன்னத்தூரில் வசூல் செய்திருக்கிறார். ரூபாய் 2000 தேறியிருக்கிறது. மீதப் பணத்தை நன்கொடையாக இன்று (சனிக் கிழமை) வசூல் செய்ய முடிவு செய்திருக்கின்றனர்.

அஜித்தின் ‘லஞ்சத்திற்கு நன்கொடை ‘ போராட்டத்திற்குப் பின்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அந்த மாவட்டத்து தோழர் கஜேந்திரன் சற்று நேரம் முன்பு சொன்னார்.

அஜித் மற்றும் நண்பர்களின் செயல்பாட்டால், ஒரு சம்பவம் வெளிவந்திருக்கிறது. ஆனால், இதுபோன்ற மனித அரக்கர்களின் கையில் கிராமப்புற ஏழைகள் சிக்கித் தவிப்பது தமிழக- இந்திய கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாளும் நடக்கிறது.
ஏழைகள் திருப்பி அடிக்காதவரை, அரக்கர்களும்- அரக்கிகளும் ஓயப்போவதில்லை. – மதிவாணன்

Leave a Response