தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வியக்க வைக்கும் பெண்கள்

”நாங்கள் எங்கள் வீடுகளையும், இயக்கத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்”.
– விவசாயிகளின் போராட்டத்தில் பெண்கள் –
………………………………………..
”வீட்டு வேலைகள் செய்வதையும், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதையும் ஒருங்கே செய்வதற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையை வகுத்துச் செயல்படுகிறார்கள் பெண்கள். ஒவ்வொரு 5-10 நாட்களுக்கு ஒரு முறையும் பெண்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்கிறார்கள். வேறு சில பெண்கள் கிராமத்திலிருந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள். ஆனால் வெளியேறும் 10 பேர்களும் தங்களுக்குப் பதிலாக 100 பேரை அணிதிரட்டி வருகிறார்கள்”
*****
ஜஸ்பிரீத் கவுர் மற்றும் குர்லீன் கவுர் ஆகிய இருவரும் கலந்து கொள்ளும் முதல் போராட்டம் இது. இப்போராட்டத்தில் கலந்து கொள்வது அவர்களின் பொறுப்பு என உணந்திருக்கிறார்கள்.
நவம்பர் 26 ஆம் தேதி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்த “தில்லி சலோ” போராட்டத்திற்காக டெல்லி நோக்கி அணிவகுத்துச் சென்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராடுகின்றனர்.

கடுமையான பனியில் பத்து நாட்களுக்கும் மேல் நடக்கும் இப்போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விவசாயிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள 69 வயதான சுரீந்தர் கவுர் “நாங்கள் எங்கள் வீடுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும், இயக்கத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும்” என்கிறார்.

இந்த மூன்று சட்டங்களும் தங்களை அதிகம் பாதிக்கும் என்பதைப் பெண்கள் நன்றாக அறிந்துள்ளனர். “இது மிகவும் வெளிப்படையான விசயம். வருவாய் குறைந்தால் முதலில் பாதிப்பது பெண்களின் சமையலறைகளில் தான் இருக்கும்” என்கிறார் ரமந்தீப் கவுர்.

சுரீந்தர் கவுர் “எங்களுக்குப் பெரிதாக எந்த நிலமும் இல்லை, அதுவும் அம்பானி – அதானிக்குப் பரிசாக வழங்கப்பட்டால் நாங்கள் எதைச் சாப்பிடுவோம்?” என கேள்வி எழுப்புகிறார்.

அமன் தீப் கவுர் தியோல் “பெண்கள் இந்த நாட்டில் ஏற்கனவே இரண்டாம்தர குடிமக்களாகத் தான் நடத்தப்படுகிறார்கள். உணவு பெறுவதிலோ, அல்லது கல்வி பெறுவதிலோ எங்களுக்கு ஒருபோதும் முன்னுரிமை தருவதில்லை. இந்தச் சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படும் போது நாங்கள் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவோம்” என்கிறார்.

”வயல்களில் வேலை செய்வது, அறுவடை செய்வது, மண்டிகளில் விற்பனை செய்வது ஆகிய எல்லாவற்றிலும் நாங்கள் எங்கள் சகோதரர்களோடு தோளோடு தோள் சேர்ந்து நிற்கிறோம். உண்மையில் கிராமங்களில் வயல் வேலைகள் அதிகமாக இருப்பதனால் தான் பல பெண்களால் போராட்டத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை.
விதைக்கப்பட்டுள்ள கோதுமை மற்றும் தீவனப் பயிர்களைக் கவனித்துக் கொள்ளும் வேலையை ஒவ்வோர் ஆண்டும் ஆண்கள் தான் செய்வார்கள். ஆனால் அதில் இப்போது பெண்கள் மட்டும் தன்னந்தனியாக ஈடுபடுகின்றனர். எங்கள் சகோதரிகளின் உழைப்பினால் தான், பல ஆண்கள் இங்கு போராட்டத்திற்கு வர முடிகிறது” என்கிறார் சுரீந்தர் கவுர்.

டெல்லி வரை வர முடியாதவர்கள், உள்ளூரில் சிறிய அளவிலான ஆர்ப்பட்டங்களில் ஆர்வமாகப் பங்கேற்கிறார்கள். தங்கள் குழந்தைகள், வயதான பெற்றோர், கால்நடைகள் போன்ற எல்லாவற்றையும் பெண்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். போராட்ட உத்வேகத்தைக் குறையவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.

“நாங்கள் அதிகாலையில் பஞ்சாபிலிருந்து புறப்பட்டு இரவில் திரும்புவோம். எங்கள் கால்நடைகளுக்கு உணவளிக்க யாரும் இல்லை, எனவே நாங்கள் கிராமங்களுக்குத் திரும்பி வர வேண்டும்.” என்கிறார் குர்லீன் கவுர், கடந்த 7 நாட்களாக தினமும் இந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

வீட்டு வேலைகள் செய்வதையும், ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதையும் ஒருங்கே செய்வதற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட சுழற்சி முறையை வகுத்துச் செயல்படுகிறார்கள் பெண்கள்.

அமன்தீப் தியோலின் 3 வயது மகள் அவருடன் திக்ரி எல்லையில் முகாமில் இருக்கிறாள். “இந்தச் சூழலுக்குப் பழகிவிட்டாள்” என்று புன்னகைக்கிறார் தியோல்.

திக்ரி எல்லையில், நவம்பர் 27 ஆம் தேதி முதல் சுமார் 20,000 – 25,000 பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்று வருகின்றனர். பாரதிய கிசான் யூனியன் (BKU) என்ற விவசாயிகள் சங்கத்தின் கீழ் ஹரிந்தர் பிந்து என்பவரின் கீழ் அணிதிரட்டப்பட்ட இந்தப் பெண்களில் பெரும்பாலானோர் மால்வா பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள்.

மால்வா பகுதி தான் பஞ்சாபில் அதிகமான விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்த பகுதி. கிட்டத்தட்ட பஞ்சாபில் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளில் 97% மால்வா பகுதியைச் சேர்ந்தது. அதிகரித்துக் கொண்டே வரும் கடன் தொல்லைகளால் தான் பெரும்பாலான விவசாயிகள் தற்கொலைகள் நடக்கின்றன.

“கோதுமை, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு பயிர்கள் மீது கடன்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே எங்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதில்லை”, என்று விவசாயிகளின் நெருக்கடியை விளக்குகிறார் ஹர்பிரீத் கவுர். பதிண்டாவில் உள்ள தனது கிராமத்தில் இப்பிரச்சினை பரவலாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதனால் தான் இந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2013 முதல் 2018 வரை பஞ்சாப் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் பரம்ஜித் கவுர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் வீட்டுப் பெண்களுக்கான முகாம் ஒன்றை நினைவுப்படுத்தி…. “அந்தப் பெண்களின் சோகத்தைக் கேட்டபின்பு 2-3 நாட்கள் நம்மால் தூங்க முடியாது. அவர்களின் துயர் துடைக்கும் வழி எதுவும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே இந்த எதிர்ப்பில் மால்வாவைச் சேர்ந்த பெண்களும் முன்னணியில் இருப்பதில் ஆச்சரியமில்லை”

அந்தப் பெண்கள் விவசாய முறைகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டிருக்கிறார்கள். இதனால் தான் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர். குடும்பப் பொறுப்பு அவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. அவர்களது இந்தப் பேரிழப்பிற்குக் காரணமான இந்த அரசின் கொள்கைகள் மீது அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் உள்ளது. இக்கருப்புச் சட்டங்களால், அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் போல் நேசிக்கும் இந்த நிலத்தை இழக்க நேரிடும். முதலில் அவர்கள் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அழிவை ஏற்படுத்தினர். இப்பொழுது இக்கருப்புச் சட்டங்கள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதைப் பெண்கள் புரிந்து இருக்கின்றனர்.

“சட்டங்கள் பற்றிய சரியான விவரங்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தங்களின் உணவைத் தட்டிப் பறிக்கும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்துள்ளனர்.” என்கிறார் ஹரிந்தர் பிந்து.

மாறாக, இச்சட்டங்களைப் புரிந்து கொள்ளாமல் எதையும் சிந்திக்காமல் பெண்கள் ஆண்களுடன் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்ற பொதுக் கருத்தை சிலர் பரப்புகின்றனர். இது பெண்களின் பங்களிப்பைக் கொச்சைப்படுத்துவதாகும்.

திக்ரி எல்லையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த பல மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மாணவர் சங்க உறுப்பினர் சுக்பிரீத் கூறுகையில், “பெண்கள் தான் பல பொறுப்புகளை முன்னின்று நிறைவேற்றுகின்றனர். அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பது பொய்” என்கிறார். வேளாண் சட்டங்கள் தங்கள் சுதந்திரத்தைப் பறிக்கும் என உணர்ந்திருக்கிறார்கள்.

மனிஷா என்ற மாணவி ”அத்தியாவசியப் பொருட்கள் குறித்த 3 ஆவது சட்டத்தின் காரணமாகப் பொருட்களின் விலை உயரும். ஏற்கனவே பொருட்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருக்கின்றன. எங்கள் வருமானமோ குறைந்து கொண்டே வருகிறது. விவசாயிகளின் பிள்ளைகளான நாங்கள் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். எங்களின் சுதந்திரம் பறிபோய்விடும்” என்கிறார்.

அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து சமையல் எண்ணெய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) சட்டம் நீக்குகிறது. அதாவது அரசாங்கம் அவற்றின் உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

“அசாதாரண சூழ்நிலைகளில்” எந்தவொரு பொருளையும் “அத்தியாவசியமானது” என்று மத்திய அரசால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். பங்கு வரம்புகளை விதிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் விலை உயர்வின் அடிப்படையில் இருக்கும் என்றும் அது கூறுகிறது. அரசாங்கம் கட்டுப்பாட்டிலிருந்து விலகினால், கார்ப்பரேட்டுகள் மொத்தமாக வாங்குவதோடு அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பார்கள் என்று விவசாயிகள் பயப்படுகிறார்கள்.

“மோடிஜியின் இந்த செயல் நம்மை மட்டுமல்ல, முழு நாட்டையும் அழித்துவிடும் என்பதை நாங்கள் மட்டுமல்ல, எங்கள் பாட்டிகள் கூட அறிந்திருக்கிறார்கள், புரிந்து வைத்திருக்கிறார்கள்” என்று சண்டிகரைச் சேர்ந்த பல்விந்தர் மற்றும் ஜஸ்லீன் கவுர் கூறுகின்றனர். இவர்கள் இருவரும் கலைஞர்கள். “நாங்கள் விவசாயிகளின் மகள்கள், மற்றும் பேத்திகள், எனவே இப்போராட்டத்தில் இணைந்துள்ளோம்”

இது போன்ற பல பெண்கள் போராட்டக்களத்தில் – சமையல், மருந்து விநியோகம், உரைகள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், பத்திரிக்கையாளர் சந்திப்புகள் போன்ற பல நடவடிக்கைகள் மூலம் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.

திக்ரி எல்லையில், சமையல் வேலைகளில் ஆண்களும் சரிக்குச் சமமாகப் பங்கேற்கின்றனர். “இது 50-50. சமையல் செய்வது ஒரு பெண்ணின் வேலை என்பதால் நாங்கள் உணவைத் தயாரிக்க வேண்டும் என்று இங்கு யாரும் சொல்லவில்லை.” என்று மாணவிகளான மனிஷாவும் சுக்பிரீத்தும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிங்கு எல்லையிலும் போராட்டம் வீச்சாக நடைபெறுகிறது.
மாணவிகளான காவல்பிரீத் மற்றும் ஜஸ்பிரீத் கவுர் “விவசாயிகள் எங்களுக்கு உணவளிக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் தோளோடு தோள் கொடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

காவல்பிரீத் தனது SSC தேர்வுக்கான தயாரிப்புக்கு நடுவே போராட்டத்திற்கு வந்துள்ளார். தேர்வுகள் இருந்த போதும் ஏன் வந்தீர்கள்? என்று கேட்டபோது, “இது எங்கள் பொறுப்பு” என்று சொல்கிறாள்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது தங்களின் கடமை என அனைத்துத் தலைமுறைப் பெண்களுக்கும் தெரிந்துள்ளது.

CITU வைச் சார்ந்த ASHA குழுவின் தலைவர் பூனம் “பல பெண்கள் வயல்களில் உழைக்கிறார்கள், கார்ப்பரேட்டுகள் விவசாயத்துறையைக் கையகப்படுத்தினால், இப்பெண்களை வெளியேற்ற மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே இச்சட்டங்களை எதிர்க்க வேண்டும்” என்கிறார்.

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது. எங்களுக்கு வெளியேற எந்தத் திட்டமும் இல்லை. சமையலறைகள் இயங்கத் தொடங்கிவிட்டன.” என்று கூறி புன்னகைக்கிறார் பரம்ஜித் கவுர்.
………………….
கட்டுரையாளர்: சோபியா சலாம்
தி வயர் இணையதளம்.
மொழிபெயர்ப்பு: நதியா

Leave a Response