தில்லி விவசாயிகள் போராட்டம் – அரியானா மாநில பாசக ஆட்சி கவிழ்கிறது?

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடுமுழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய சட்டங்களில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாகவும் தங்களுக்கு அரசு வழங்கி வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத் தப்பட்டுவிடும் என்றும் விவசாயிகள் சொல்கின்றனர்.

இதனால், நவம்பர் 27 முதல் தில்லியில் இலட்சக்கணக்கானோர் போராடிவருகின்றனர்.

இந்தப் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் பாசக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அதுகுறித்த விவரம்…

அரியானா மாநிலத்தில் தேசிய சனநாயகக் கூட்டணி (என்டிஏ) உறுப்பினராக இருப்பது ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி). இதன் தலைவரான துஷ்யந்த் சவுதாலா அம்மாநிலத்தின் துணை முதல்வராக உள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் அரியானாவின் ஜாட் சமூகத்தினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஜேஜேபி, ஜாட் சமூகத்தினருக்கான கட்சி என்பதால், அவர்களது குறைந்தபட்ச நிர்ணய விலை (எம்எஸ்பி) மீதானக் கோரிக்கையில் ஆதரவளித்துள்ளது.

இதுகுறித்து ஜேஜேபியின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, ‘‘விவசாயிகளின் எம்எஸ்பி மீதான கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் துணை முதல்வர் பதவியை துஷ்யந்த் ராஜினாமா செய்வார்.

இப்பிரச்சனையை உடனடியாகப் பேசித் தீர்க்கும்படி மத்திய அரசை எங்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. எனவே, விரைவில் போராட்டம் முடிவிற்கு வரும்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்பு என்டிஏவின் உறுப்பினரான ராஷ்டிரிய லோக்தாந்திரிக் கட்சியும் விவசாயிகளுக்கு ஆதரவளித்திருந்தது. இவர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறி அதன் கட்சித் தலைவரும் எம்.பியுமான ஹனுமன் பேனிவால் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

இதனால், பாஜக அரசிற்கு ஆதரவளித்து வரும் அரியானா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இப்பிரச்சனையில் அழுத்தம் அதிகரித்துள்ளது. இதில், சிறிய கட்சி மற்றும் சுயேச்சைகளும் இடம் பெற்றுள்ளதால், பாசக ஆட்சிக்கு சிக்கல் உருவாகி உள்ளது.

அரியானா மாநிலத்தில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன.
இவற்றில்…

பாசக – 40
காங்கிரஸ் – 31
ஜேஜேபி – 10
இந்திய தேசிய லோக் தள் – 1
சுயேச்சைகள் – 8

ஆகிய எண்ணிக்கையில் இருக்கின்றனர்.

இதில் பத்து பேர் கொண்ட கட்சி ஆதரவை விலக்கிக் கொண்டால் பெரும்பான்மையை இழந்து ஆட்சியைப் பறி கொடுக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள்.

இதனால் பாசக தலைமையும் பிரதமர் மோடியும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

Leave a Response