ஐஏஎஸ் அதிகாரிக்குச் சம்பளம் – கமல் கட்சியில் சலசலப்பு

முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான சந்தோஷ் பாபு, சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். அவருக்கு பொதுச் செயலாளர் (தலைமைஅலுவலகம்)என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் பாபு,1995 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றினார். 8 ஆண்டுகள் பணிக்காலம் உள்ள நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.

செய்தியாளர்களிடம் சந்தோஷ் பாபு கூறும்போது, ‘‘பாரத் நெட் டெண்டர் விவகாரத்தில் எனக்கு அழுத்தம் இருந்ததால், ஓய்வு பெறுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே விருப்ப ஓய்வு பெற்றேன். நேர்மையான தலைவர் ஒருவர் வேண்டும் என்பதால் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளேன்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்.

கட்சியில் இணைவதாக 6மாதங்களுக்கு முன்பே எண்ணினார் சந்தோஷ் பாபு. அது தற்போதுஅமைந்துள்ளது. நேர்மையாளர்கள், வல்லவர்கள், திறமையாளர்கள் மூச்சு விடுவதற்கு ஏற்ற சூழலைஉருவாக்குவதுதான் என் முதல் கடமை. அதற்கேற்ற ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்.

பொது ஆரோக்கியம் கருதி தேர்தல் பரப்புரையை வேறு பாணியில் அணுக முடிவு செய்து சற்று தள்ளி வைத்துள்ளோம். தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

கூட்டணி அமைத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் கொத்தடிமையாக இருக்க முடியாது. கூட்டணி இன்றி தனித்து நிற்க வேண்டும் என்பதே எல்லாக் கட்சிகளின் ஆசை. அதற்கு மக்கள் நீதி மய்யமும் விதிவிலக்கு அல்ல.

கொரோனா, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகளில் எனக்குத் திருப்தி இல்லை. சமுதாயக் கோபத்தை நான் அடக்க மாட்டேன். நம்மை ஊழல் தாக்கிக்கொண்டிருக்கிறது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. எங்கிருந்தாலும் அது மாற வேண்டும்.

விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு அஜாக்கிரதையாக விடக்கூடாது. இது மேலும் மேலும் பலமாக ஒலிக்க விடுவது நாட்டுக்கு நல்லதல்ல. எனவே, கட்சி வடிவம், கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் தலைவர்களாக இருந்து விவசாயிகளுடன் பேச வேண்டும்.

தேர்தலில் பரப்புரையின்போது வீடு வீடாகச் செல்லப்போகும் நான், நண்பன் ரஜினி வீட்டுக்குச் செல்லாமல் விடுவேனா? திரைத் துறையில் நாங்கள் போட்டியாளராக இருந்தோமே தவிர, பொறாமைக்காரர்களாக இல்லை. வருங்காலத்தில் போட்டியாளராக இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அரசியல் பிரவேசத்தைவிட அவரது ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம்.

இவ்வாறு கமல் கூறினார்.

ஆட்சிப்பணி அதிகாரி சந்தோஷ்பாபுவுக்கு கட்சியிலும் இணையதளப் பிரிவைக் கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் அதற்காக அவருக்குப் பெரும்தொகை மாதச் சம்பளமாகக் கொடுக்கப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.

இதனால் ஏற்கெனவே இந்த வேலை செய்துகொண்டிருந்தவர்கள் அதிருப்தி தெரிவித்ததால் சலசலப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response