ரஜினியை விடாது துரத்தும் பாஜக – அம்பலப்படுத்திய சந்திப்பு

தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று 2017 டிசம்பர் 31 ஆம் தேதி அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால், இதுவரை கட்சி தொடங்கவில்லை.2020 மார்ச் 12 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘நான் முதல்வராக மாட்டேன். வேறு ஒருவரை முதல்வராக முன்னிறுத்துவோம்’’ என்று அறிவித்தார். அதன்பிறகும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் 2020 அக்டோபர் 29 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகச் சொல்லப்பட்டது. அதோடு, ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை சமூக வலைதளங்களில் பரவியது.

அந்த அறிக்கையின் ஒரு பகுதியில்…..

2011 ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரகம் தீவிரமாகப் பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.

கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத நிலையில் எனக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், ‘கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது, வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் உங்கள் உடல்நிலை அதை ஏற்றுக்கொள்ளுமா? என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியவரும். இப்போது உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால் இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.

இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து அன்றே ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது….

என் அறிக்கை போல் ஒரு கடிதம் சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இது ரஜினி ரசிகர்கள், ஆதர வாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்ற கருத்துகளும் பரவின.

இந்நிலையில், ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, ரஜினியின் பெயரில் வெளியான கடிதம் குறித்தும் அதற்கு ரஜினி அளித்த பதில் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக்த் தெரிகிறது.

அதிமுக, திமுகவை வீழ்த்த வேண்டுமானால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று பல ஆண்டுகளாக குருமூர்த்தி வலியுறுத்தி வருகிறார். நேற்றைய சந்திப்பின்போதும் இதை அவர் வலியுறுத்தினாராம்.

கட்சி தொடங்குங்கள்.அதற்கு உடல் நிலை ஒத்துழைக்காவிட்டால் திமுகவுக்கு எதிரான அணிக்கு வெளிப்படையான ஆதரவு அளியுங்கள் என்று ரஜினியிடம் குருமூர்த்தி வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்பது தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை. மாறாக குருமூர்த்தி போன்ற பாஜக ஆதரவாளர்களுக்குப் பெரும் இழப்பாக இருக்கிறதென்ற விமர்சனங்களை மெய்ப்பிக்கும் வண்ணம் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது என்கிறார்கள்.

Leave a Response