ரசியாவில் அதிபரின் பதவிக் காலம், 6 ஆண்டுகள் ஆகும். அந்நாட்டு அரசியல் சாசனப்படி, ஒருவர், 2 முறை மட்டுமே தொடர்ந்து அதிபராக நீடிக்கலாம். அதன்படி, 2008 வரை, 2 முறை தொடர்ந்து அதிபராக இருந்த, புதின், அதன் பின்னர் பிரதமராகப் பதவி வகித்தார்.
அதனைத் தொடர்ந்து 2012-ல் மீண்டும் அதிபர் பொறுப்புக்கு வந்த அவர், 2018 அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.
அவரது பதவிக் காலம், 2024-ல் முடிகிறது. அதன் பின்னர் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்த நாட்டின் சட்டத்தில் இடமில்லை.
இந்த நிலையில், அரசியல் சாசன சட்டத் திருத்தங்கள் மூலம் பல்வேறு சீர்திருத்தங்களை செயல்படுத்தப் போவதாக, கடந்த ஜனவரியில், புதின் அறிவித்தார்.
அதன்படி, அரசியல் சாசனச் சட்டத் திருத்த மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், ஓய்வூதியத்திற்கு உறுதிமொழி வழங்குவது, தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், ரஷிய அதிபர் பதவி காலத்திற்கான வரம்பை தளர்த்துவது ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த சட்டத் திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேறியது.
இந்த மசோதா சட்டமானால் 2024 மற்றும் 2030-ல் நடைபெறும் அதிபர் தேர்தல்களில் புதின் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இருக்காது.
அதன்படி இந்த 2 தேர்தல்களிலும் புதின் வெற்றி பெறும் பட்சத்தில் அவர் 2036 வரை, அதாவது, அவரது, 83வது வயது வரை, அதிபராகப் பதவி வகிக்கலாம்.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து தொடர்ந்து அவர் வெற்றி பெற்று வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்நிலையில் போட்டியிடுவதற்கான தடையைத் தாமே அகற்றிக் கொண்டதன் மூலம் அவர் தொடர்ந்து அதிபராக இருப்பார் என்று சொல்லப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாவுக்கு அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டும் ஒப்புதல் அளித்துவிட்டது. அதிபர் புதினும் இந்த மசோதாவில் கையெழுத்துப் போட்டு விட்டார்.
எனினும் இதை சட்டமாக்குவதற்கு முன்பு மக்களின் விருப்பத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த புதின் விரும்புகிறார் என்று சொல்லப்பட்டது.
சட்டப்பூர்வமாக இது தேவையில்லை என்றாலும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்வதில் ஜனநாயகத்தை பொறுப்பை உறுதி செய்ய பொதுவாக்கெடுப்பை நடத்த புதின் முடிவு செய்தார் என்றும்,அதனால், ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக அது ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கோரோனோ வைரஸ் பாதிப்பில் ரஷியா தொடர்ந்து 3 ஆவது இடத்தில் இருந்து வரும் இந்த வேளையில் வாக்கெடுப்பை நடத்துவது பாதுகாப்பற்றது என்றும் பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் மீறி, ஜூன் 25 ஆம் தேதி துவங்கியது. கடந்த ஒருவாரமாக நடந்த ஓட்டெடுப்பில், 77.93% மக்கள் புதின் ரசிய அதிபராக 2036 ஆம் ஆண்டு வரை தொடர ஆதரவு அளித்துள்ளனர். 21.6% பேர் இதற்கு எதிராக ஓட்டளித்துள்ளனர். இதனை தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், 2036 ஆம் ஆண்டு வரை ரசியாவின் அதிபராக புதின் தொடர உள்ளார் என அறிவித்துள்ளது.
ஆனால் இந்த ஓட்டெடுப்பே பொய்யானது என எதிர்கட்சிகள் கூறியிருக்கின்றன. பொதுவாக்கெடுப்பிலும் முறைகேடு செய்து 2036 வரை பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் புதின் என்கிற விமர்சனங்களும் எழுகின்றன.
அதோடு, தற்போது பதவியிலிருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி தாமே தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் வண்ணம் சட்டத்தைத் திருத்தினால் என்னவாகும்? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் ரசிய அதிபர் புதின், இதன்மூலம் உலகின் மிக ஆபத்தான மனிதர் என்கிற பெயரையும் பெறுகிறார்.