தமிழகத்தில் ஜூலை 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு உறுதியானது

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கை நீட்டிப்பதா? தளர்த்துவதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் ஜூலை 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சிறப்புத் தொடர்வண்டிகள் இரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் குறிப்பிட்ட அளவில் மட்டும் சிறப்புத் தொடர்வண்டிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு நாளை முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சிறப்புத் தொடர்வண்டிகளை இரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுச் சிறப்புத் தொடர்வண்டிகள் இரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, திருச்சி -செங்கல்பட்டு, மதுரை -விழுப்புரம், அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோயில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இயங்கும் சிறப்புத் தொடர்வண்டிகள் இரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

எனினும் சென்னை சென்ட்ரல்- டெல்லி செல்லும் ராஜ்தானி சிறப்புத் தொடர்வண்டி அட்டவணைப் படி இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. சிறப்புத் தொடர்வண்டிகளில் முன்பதிவு செய்த அனைத்துப் பயணிகளுக்கும் முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு அவரது வங்கிக் கணக்கில் பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை பயணிகள் தொடர்வண்டி சேவை இரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 30 ஆம் தேதியோடு முடிவடைய இருக்கும் ஊரடங்கு அதோடு முடிந்துவிடுமா மேலும் நீட்டிக்கப்படுமா? என்கிற கேள்வி இருக்கும் நேரத்தில் ஜூலை 15 வரை சிறப்புத்தொடர்வண்டிகளை இரத்து செய்ய தமிழக அரசு கோரிக்கை வைத்திருப்பதால் அதுவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவது உறுதியாகியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response