தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் நிலை அந்தோ பரிதாபம்

போலி பாஸ்போர்ட் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கை தமிழர் மோகன், மர்மமான முறையில் கடந்த 4ஆம் தேதி இறந்தார். மோகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து இயற்கை மரணம் என்று முதலில் கூறிய காவல்துறை, இப்போது  சந்தேக மரணம், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கோருதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. தொடர்ந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆலந்தூர் மாஜிஸ்திரேட் வித்யா முன்னிலையில், பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் மோகனின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரித்தார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு கூறுகையில், “இலங்கை தமிழர் மோகனின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, போலி பாஸ்போர்ட் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், மோகனை அழைத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் யாருக்குமே தெரிவிக்கப்படவில்லை. மோகன் நிலை குறித்து காவல் நிலையத்தில் கேட்டபோது, உருப்படியான பதில் இல்லை. இந்த சூழ்நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மோகன் இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

மோகனின் உடலில் பல காயங்கள் இருக்கின்றன. குறிப்பாக கைகளில் காயங்கள் காணப்படுகின்றன. இதனால் விசாரணை என்ற பெயரில் மோகன், சித்ரவதை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மாஜிஸ்திரேட் விசாரணை கேட்டோம். பிரேத பரிசோதனை முடிவில் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். மாரடைப்பில் மோகன் சாகவில்லை. போலீஸ் தாக்குதலில் அவர் இறந்து இருக்கவே வாய்ப்புள்ளது. மேடவாக்கத்தில் தங்கி இருந்த மோகன், அங்கு ஒரு பெண்ணுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்துள்ளார். அந்த பெண்ணையும் காவல்துறையினர் மிரட்டி, தங்களுக்கு சாதகமாக செயல்பட வைத்துள்ளனர். இதற்காக மோகனின் உடலை அவரிடம் கொடுக்க, காவல்துறையினர் முயற்சித்தனர். அதை தடுத்துவிட்டோம். பிறகு மோகனின் தம்பி ரமேஷிடம் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம்” என்றார்.

இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் நடக்கும் துயரங்கள் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் நம்மிடம் கூறுகையில், “தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலைமை அந்தோ பரிதாபமாக இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க தயங்குவதைப் போல இலங்கைத் தமிழர்களுக்கும் வீட்டை வாடகைக்கு கொடுக்க உரிமையாளர்கள் முன்வருவதில்லை. அதையும் மீறி கொடுத்தால் இரண்டு அல்லது மூன்று மடங்கு வாடகை உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. இதில் குறிப்பிட்ட தொகையை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதோடு வாடகைக்கு குடியிருக்கும் இலங்கை தமிழரின் நடவடிக்கைகள் அனைத்தும் காவல் நிலையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது. அவர்கள் ஏதாவது தொழில் செய்தால், அங்கேயும் காவல்துறையின் தலையீடு இருக்கிறது. சில நேரங்களில் குடும்பத்தோடு வாழும் இலங்கை தமிழரின் மனைவி மற்றும் பெண் குழந்தைகளிடம் காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம், படுமோசமாகவே இருக்கிறது. இதில் மனமுடைந்து சிலர் தற்கொலையும் செய்து இருக்கிறார்கள்.
இலங்கை தமிழர்கள் வாழும் முகாம்களில் அடிப்படை வசதிகள் பெயரளவுக்கே உள்ளன. இதுகுறித்து யாரிடமும் சொல்ல முடியாது. காவல்துறையினரின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, இலங்கையில் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைப்பட்டு இருந்ததைப் போல காவலர்களின் அடக்கு முறையில் இங்கு அடைப்பட்டு இருக்கிறோம்” என்றார் வேதனையுடன்.

Leave a Response