அமித்ஷா ஏன் இப்படிச் செய்தார்? – காணொலியில் மோடியிடம் மம்தா காட்டம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 3 ஆவது கட்ட ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவது குறித்தும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரசுத் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியதை அந்தக் கட்சி அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது…..

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்கும், மத்திய அரசு அதன்பின் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகள், தளர்வுகளுக்கும் பல்வேறு முரண்கள் இருக்கின்றன. குறிப்பாக தேசிய அளவில் ஊரடங்கு நடவடிக்கை மோசமான தி்ட்டமிடலுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாநிலத்தில் உள்ள களச்சூழலை ஆய்வு செய்து எந்ததெந்த துறைகள் செயல்பட வேண்டும், செயல்பட வேண்டாம் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்ய வேண்டும்.

ஒருபுறம் ஊரடங்கைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துங்கள் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி வருகிறது. மற்றொரு புறம் தொடர்வண்டிச் சேவையைத் தொடங்கி, மாநில எல்லைகளைத் திறக்கிறீர்கள். தொடர்வண்டிகளை அனுமதிப்பதும், நில எல்லைகள், உள்ளிட்ட அனைத்தையும் திறந்துவிடுவதுதான் ஊரடங்கின் நோக்கமா? இது முரணாக இருக்கிறது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். மேற்கு வங்கம் தொடர்வண்டிகளை அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி எனக்கு அவர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன? அதை ஏன் ஊடகங்களுக்கு அனுப்பினார்? இந்தச் செய்தி வந்தபின் மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

நான் உங்களுக்கு என்ன செய்தேன், எதுவாக இருந்தாலும் மாநில முதல்வர் என்ற முறையில் நேரடியாகப் பேசலாமே. இதுபோன்று மற்ற மாநிலங்களுக்கும் கண்டிப்பாக நடக்கக்கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 10 மாநிலங்களில் மேற்கு வங்கம் கடைசியில் இருக்கிறது. இருப்பினும் எங்களுக்கு எதிராக மத்திய அரசு வேறுபாடு காட்டுகிறது என்பதைச் சொல்லவே வேதனையாக இருக்கிறது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறி கடிதம் எழுதி அதை ஊடகங்களுக்கு ஏன் அனுப்பினார் அமித் ஷா? அவர் எழுதிய கடிதத்தை ஊடகங்களுக்கு அனுப்பியது எனக்கு அதிருப்தி அளிக்கிறது.

தொழிலாளர்களுக்கு ஆதரவான பல்வேறு சட்டங்களை, உரிமைகளைப் பறிக்கும் விதமாக அதை இரத்து செய்த உத்தரப் பிரதேச அரசு பற்றி மத்திய அரசு ஒரு கேள்வி கூட எழுப்பாதது வியப்பாக இருக்கிறது.

எங்கள் மாநிலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். சித்தாந்த ரீதியான போர் நடத்த இது சரியான நேரம் இல்லை. ஆனால், இந்தப் போர் நாள்தோறும் நடக்கிறது. கூட்டாட்சி அமைப்பு ஒருபோதும் அடித்து தரைமட்டமாக்கக்கூடாது. ஊரடங்கை எப்போது தளர்த்துவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதி்க்க வேண்டும்.

மத்திய அரசுடன் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடுகிறோம். ஆனால், அரசியல் ரீதியாகத் தேவையில்லாமல் மேற்கு வங்கம் குறிவைக்கப்படுகிறது. மாநிலங்களிடம் பொறுப்பை மாற்றுவதற்குப் பதிலாக, எவ்வாறு முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பது குறித்த தெளிவான சிந்தனையுடன் மத்திய அரசு வர வேண்டும்.

மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் கூட்டாட்சித் தத்துவத்தையும், மனிதநேயத்தையும் மதித்து நடக்கின்றன. எங்களுக்கு எந்தவிதமான முன்அறிவிப்பும் கொடுக்காமல் மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அனுப்பி மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அனுப்பியது.

அதேபோல புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தொடர்வண்டிக் கட்டணத்தை அவர்களே செலுத்துகிறார்கள். மத்திய அரசால் முடியாவிட்டால், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நாங்கள் செலுத்துகிறோம். அனைத்து மக்களுக்கும் 100 சதவீதம் பரிசோதனை நடத்துவதற்கான கருவிகளை வழங்கிட வேண்டும், தொழிலாளர்கள் எந்தவிதமான நோய்த்தொற்றும் இல்லாமல் சொந்த ஊருக்குத் திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Leave a Response