நடிகர் மம்முட்டி மகனுக்கு சீமான் எச்சரிக்கை

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச் சித்தரிக்கப்பட்டு வெளிவந்துள்ள காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..

மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள (Varane Avashyamund) “வரனே அவசியமுண்ட” திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த்தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாகவும் அடையாளமாகவுமிருக்கும் இப்பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உன்னதத் தலைவராம் மேதகு.வே.பிராபகரன் அவர்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபுசார்ந்த நவீன வலிமை வாய்ந்த இராணுவ கட்டமைப்பினாலும், கட்டுகோப்பான ஒழுக்கத்தினாலும் இன விடுதலைக்குக் குரல்கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் மேதகு. வே.பிரபாகரன் அவர்களைத் நடிகர் துல்கர் சல்மான் அவர்களோ, அல்லது சம்பத்தப்பட்ட அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் துல்கர் சல்மான் அவர்களின் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA) திரைப்படத்திலும் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன்படுத்தப் பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும். அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல. படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம்.

மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது. பழைய படத்தின் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிப்பு என்பது தொடர்ந்துகொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்கவேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பதுதான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம்பயக்கும் என்பதைச் சம்மந்தப்பட்ட படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response