
இன்று தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு எண் 285 இல் கூறப்பட்டிருப்பதாவது…..
கொரொனா வைரஸ் தொற்று நோயினைத் தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளைக் கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய ஆயுஷ் அமைச்சகம் கோவிட் -19 தொற்று நோயினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. அதில் நிலவேம்புக் குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் 11 மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் அரசு மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த மூத்த இந்திய மருத்துவர்களும் மூத்த அலோபதி மருத்துவர்களும் இடம்பெற்று ஆலோசனை செய்து அரசுக்கு தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.
அதில் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் யுனானி மற்றும் ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளை மக்கள் பய்ன்படுத்திக் கொள்ள ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டம் மூலம் வழிமுறைகளை வெளீயிட பரிந்துரைகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வல்லுநர்களின் பரிந்துரைகளை ஏற்று தமிழ்நாட்டுப் பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் சிகிச்சை பெற்ற பின் உடல்நலத்தைப் பேணவும் இன்று (23.04.2020) ஆரோக்கியம் என்ற சிறப்புத் திட்டத்தினைத் தொடங்கி வைத்து நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதற்கும் உடல்நலம் பேணுவதற்கும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து சென்னை மாநகரில், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் (Containment Zone) வசிக்கும் ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும்.இந்த விநியோகத்திலும் சம்பந்தப்பட்ட அலுவலர்களும் பயனாளிகளும் சமூக இடைவெளியை முறையாகக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சிறப்புத் திட்டத்தின் வழிமுறைகள், கொரோனா நோய்க்கான சிகிச்சை அல்ல எனவும் பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நுண்கிருமித் தொற்று தொடங்கிய காலத்திலேயே தமிழ் மருத்துவர்கள் கபசுரக் குடிநீரைப் பரிந்துரைத்தார்கள். ஆனாலும் அரசாங்கம் அங்கீகரிக்காமல் இருந்தது.அதைத் தாண்டி வெகு மக்களிடம் அது சென்று சேர்ந்தது என்றாலும் இப்போது அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால் மருந்து மாஃபியாக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.


