கர்நாடகத்தில் பெருமளவு ஊரடங்கு தளர்வு – இன்று முதல் அமலாகிறது

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில விதிவிலக்குகள் அறிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

அப்போது செய்யாமல் இன்று (ஏப்ரல் 23) முதல் ஊரடங்கை தளர்த்தி சிலவற்றுக்கு விலக்கு அளித்து மாநில தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது…..

மருத்துவமனை மற்றும் அவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், விவசாயம், அவை சார்ந்த தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அது தொடர்பான போக்குவரத்தையும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கல்வி நிலையங்களும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். ஆனால் இந்தக் கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்க அனுமதிக்கப்படுகிறது. நீர்ப்பாசனத்துறை, தண்ணீர் சேகரிப்பு துறைகள் இயங்கலாம்.

மாவட்ட நிர்வாகங்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்வதை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து தடுக்கப்படும். அரசுப் பணிகளுக்கான உதவி மையங்கள், தகவல் மையங்கள் செயல்படலாம். குளிரூட்டப்பட்ட பதப்படுத்தும் மையங்கள், கிடங்குகள் செயல்படலாம்.

கூரியர் சேவைகள் அனுமதிக்கப்படுகிறது. தனியார் பாதுகாப்பு சேவைகள், தங்கும் விடுதிகள், ஹோம்ஸ்டே, மருத்துவ ஊழியர்கள், விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து ஊழியர்களை அனுமதிக்கலாம். கொரோனா தனிமைப்படுத்தும் கட்டிடங்களை இயங்க அனுமதிக்கலாம். எலக்ட்ரீசியன், பிளம்பர், மோட்டார் வாகன பழுது நீக்கும் தொழிலாளர்கள், மர வேலை செய்பவர்களை உள்ளூர் அளவில் அனுமதிக்கலாம்.

கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், நிலக்கரி உற்பத்தி, இரும்புத் தாது உற்பத்தி மற்றும் அது தொடர்பான போக்குவரத்து, கிராமப்புறங்களில் சாலைகள் அமைத்தல், நீர்ப்பாசனத் திட்டங்கள், கட்டிட கட்டுமானம், அனைத்து வகையான தொழில்நிறுவன திட்டங்கள், தொழிற்பேட்டைகள் அனுமதிக்கப்படுகிறது. அந்த தொழிற்பேட்டைகளில் அங்கேயே தங்கிப் பணியாற்ற வேண்டும். வெளியில் இருந்து தொழிலாளர்கள் வர அனுமதி இல்லை.

நகரப் பகுதியில் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் தொழிலாளர்கள் அங்கேயே இருந்து பணியாற்ற வேண்டும். உரிய முன் அனுமதி பெற்ற அவசர வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஆயில், கியாஸ் துறைகள் செயல்படும். மின் உற்பத்தி-விநியோகம் மற்றும் தபால் அலுவலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

சிமெண்டு, இரும்பு, ஜல்லி, பெயிண்ட், டைல்ஸ், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் செங்கல் தயாரிப்பு, சரக்கு ரெயில்கள், சரக்கு விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. 2 டிரைவர்கள் ஒரு கிளினீருடன் அனைத்து வகையான சரக்கு லாரிகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகளில் உணவகங்கள், வாகன பழுதுநீக்கும் பணிமனைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், கப்பல்கள், சரக்கு கப்பல்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்குச் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இருந்து பாஸ்களை பெற வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், அது தொடர்பான உற்பத்தி நிறுவனங்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதைக் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். இறைச்சிக் கடைகள், பால் விற்பனை கடைகள், கால்நடைகளுக்கு தேவையான தீவன கடைகள், பழம், காய்கறி கடைகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து அரசு அலுவலகங்களும் திறக்கப்படும். வன அலுவலகங்கள், வன விலங்குகள் சரணாலயங்களில் ஊழியர்களைப் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறது. பணியாற்றும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்க வேண்டும். மதுபானம், புகையிலை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி இல்லை. அலுவலகங்களில் சமூக விலகல் பின்பற்றப்பட வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயது குழந்தை உள்ள பெற்றோர் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

அனைத்து நிறுவனங்களில் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும். ஊரடங்கு விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது பேரிடர் நிர்வாகச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஊரடங்கு தளர்வு உத்தரவு 23-ந் தேதி(இன்று) முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு தலைமைச் செயலாளர் விஜயபாஸ்கர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Leave a Response