கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டது.
அத்தியாவசியத் தேவைகளான பால், மருந்து, மளிகை, மருந்து மற்றும் உணவுப் பொருட்களுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டதுடன், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.
ஆனால், ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகும் கொரோனா கட்டுக்குள் வராததால், ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மேற்கொள்ள மத்திய உள்துறை அனுமதி அளித்தது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஊரடங்கு தளர்வு வழிகாட்டுதலை வெளியிடுவது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு, மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….
ஏப்ரல் 15 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில், 20.4.2020 க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள், தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய, 16.4.2020 அன்று ஒரு வல்லுநர் குழுவை தமிழ்நாடு அரசு நியமித்து ஆணையிட்டு இருந்தது. அக்குழு, முதல் கூட்டத்தை நடத்தி, அதனுடைய முதற்கட்ட ஆலோசனைகளை முதல்வரிடம் இன்று (20.4.2020) சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் ஆலோசனைகள் கவனமாக ஆராயப்பட்டன.
அதன் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளதால், மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம்-2005ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 3.5.2020 ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்துள்ளது.
அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கெனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்றின் தன்மையை மீண்டும் ஆராய்ந்து, நோய்த் தொற்று குறைந்தால், வல்லுநர் குழுவின் ஆலோசனையைப் பெற்று, நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவுகள் எடுக்கப்படும்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் நூறுநாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் சிறு குறு தொழில் நிறுவனம் நடத்துபவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.