மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஊரடங்கு போடப்பட்ட நாளில் இருந்தே இந்தியாவில் தொழில்கள், தொழிற்சாலைகள் நசிவுற்று, பல்வேறு மாநிலங்களில் தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். ஊரடங்கு நிறைவு பெற்றாலும், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள காத்திருக்கின்றனர்.
தொழில் பாதிப்பின் அவலம் கருதி மத்திய அரசு இன்று (20ம் தேதி) முதல் ஊரடங்கைச் சற்றுத் தளர்த்தி, ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செயல்படும் தொழிற்சாலைகள் குறைந்தளவு பணியாளர்களைக் கொண்டு இயங்கலாம் என உத்தரவிட்டுள்ளது. அதிலும் எந்தெந்த தொழிற்சாலைகளை இயக்குவது என மாநில அரசுகள் முடிவு செய்து அறிவிக்க உள்ளன.
இந்தச் சூழலில் இன்று முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை மீண்டும் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, ஏப்ரல் மாதம் வழக்கமாக சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் அமலுக்கு வரும். இந்த மாதம் ஊரடங்கு காரணமாக இன்று முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய கட்டணத்தின் படி 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சுங்க்கட்டணம் உயர்ந்துள்ளது வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொரோனாவில் இருந்து இன்னமும் இந்தியா மீளவில்லை. நாளுக்கு நாள் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் இதுவரை கண்டிராத அதல பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் மீட்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய மத்திய அரசு, பாவப்பட்டவர்களை மீண்டும் சுரண்டுவதிலேயே குறியாக இருக்கிறது என்று சாபம் கொடுக்கிறார்கள் மக்கள்.