விஜயபாஸ்கருக்குக் கொரோனா தொற்றா? – காங்கிரசு தலைவரின் கருத்தால் பரபரப்பு

கொரோனா சிக்கல் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இருந்தவர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.ஆனால் தற்போது அவர் புதுக்கோட்டையில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அரசியல் ரீதியாக அவரை எடப்பாடி பழனிச்சாமி ஓரங்கட்டி வைத்திருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.

அண்மையில் இதுகுறித்துப் பேசிய தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி,தலைநகர் சென்னையில் இருந்து கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடவேண்டிய சுகாதார அமைச்சர் சமீபகாலமாக பார்வையில் தென்படாமல் இருக்கிறார். இச்சூழலில் நேற்று மாலை (ஏப்ரல் 5) புதுக்கோட்டையில், தமது வீட்டில் அகல் விளக்கை ஏற்றியிருக்கிறார்.

ஆனால் சமீபகாலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துக்கொண்டிருந்த அமைச்சருக்கு பதிலாக சுகாதாரத்துறை செயலாளர் சந்தித்து வருகிறார். இத்தகைய திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய மக்கள் விரும்புகிறார்கள் என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு எந்தப்பதிலும் இல்லை, இந்நிலையில் காங்கிரசு முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் அன்புமணிராமதாசின் மைத்துனருமான டாக்டர் விஷ்ணுபிரசாத்தின் ட்விட்டர் பதிவில்,
தமிழ் நாடு சுகாதார அமைச்சர் தனிமைப்படுத்த பட்டுள்ளாரா? அவரின் உடல் மற்றும் மன நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். என்று பதிவிட்டிருக்கிறார்.

அரசியல் ரீதியாக விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் நேரத்தில், அவருடைய உடல் மற்றும் மனநிலை என்று டாக்டர் விஷ்ணுபிரசாத் பதிவிட்டிருப்பதால், விஜயபாஸ்கருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டதோ என்கிற சந்தேகம் மக்களுக்கு வந்திருக்கிறது. அதைத் தெளிவு படுத்த யாருமில்லை.

Leave a Response