விற்பனையுமில்லை விலையுமில்லை சுங்கம் மட்டும் வசூல் செய்வதா? அதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் ஏர்முனை இளைஞர் அணியைச் சேர்ந்த என்.எஸ்.பி.வெற்றி.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் விவசாயிகளின் கோரிக்கை.
கொரானா பாதிப்பால் உலகமே மிகப்பெரும் சிக்கலிலுள்ள சூழ்நிலையில் மக்களுக்கு தங்கு தடையின்றி உணவுப் பொருட்கள் கிடைக்க வேண்டுமென்பதற்காக தம் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை கொண்டு வரும் விவசாயிகள் தமது குடும்பத்தையும் உயிரையும் பணயம் வைத்தே தினசரி காய்கறி சந்தை மற்றும் உழவர் சந்தைக்கும் பயணிக்கின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் திருப்பூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை குறைவாகவும் கட்டுபடியாகாத விலையாகவும் உள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த அசாதாரண சூழலிலும் திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில் சுங்க வசூல் நடந்து கொண்டிருக்கின்றது.
தோட்டத்தில் காய்கறிகள் பறிக்க ஆகும் கூலி கூட கட்டுபடியாகாமல் பெரும் நட்டத்தில் பல விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வராத சூழ்நிலையில் சில விவசாயிகள் கடும் சிரமத்தில் காய்கறிகளை கொண்டு வரும் போது அவர்களிடம் சுங்கம் வசூலிப்பது ஏற்புடையதாக இல்லை.
இன்றைய சூழலில் சுங்கக் கட்டணம் நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டியது.
ஆகவே திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக சுங்கதாரர் சுங்க வசூல் செய்வதை தவிர்க்கக் கூறி தன்னலமற்று காய்கறிகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்.
மேலும் அதிகாலையில் காய்கறிகளை ஏற்றி வந்துகொண்டிருந்த அரசு பேருந்துகளை மீண்டும் அனுப்பி வைத்து விவசாயிகளின் போக்குவரத்தில் உள்ள கடுமையான சிரமத்தை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவண்
என்.எஸ்.பி.வெற்றி
செயல் தலைவர்
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் &
ஏர்முனை இளைஞர் அணி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.