மரணதண்டனை விதிக்கப்பட்ட போர்க் குற்றவாளி விடுதலை – அப்படித்தான் என்று கோத்தபய அறிவிப்பு

சிங்கள அரசு திட்டமிட்டு தமிழினப்படுகொலையில் ஈடுபட்டு இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களைக் கூட்டம் கூட்டமாக கொன்றது..

2000 ஆம் ஆண்டு, டிசம்பர் 19 ஆம் தேதி யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 5 வயதுக் குழந்தை உள்ளிட்ட தமிழர்களைச் சிங்கள ராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்நாயகா சுட்டுக்கொலை செய்தார்.

அவனால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டவர்கள், ஞானபாலன் ரவீந்திரன், செல்லமுத்து தெய்வகுலசிங்கம், வில்வராஜா பார்த்திபன், சின்னையா வில்வராஜா, நடேசு ஜெயச்சந்திரன், கதிரன் ஞான சந்திரன், ஞானசந்திரன் சாந்தன், வில்வராஜா பிரசாத் ஆவர்.

இது தொடர்பாக சுனில் ரத்நாயகா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணை முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட நிலையில், மரண தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை இலங்கை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்து உத்தரவிட்டது.

அவர், கொழும்பு வெலிக்கடைச் சிறையில் மரண தண்டனை கைதியாக இருந்து வந்தார்.

இந்தநிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார்.

இதுபற்றி அவரது ஊடகப் பிரிவு செய்திதொடர்பாளர் கூறும் போது, “சிறையில் இருந்து சுனில் ரத்நாயகாவை விடுதலை செய்யுமாறு நீதித்துறைக்கு அதிபர் அறிவுறுத்தி உள்ளார்” என்று குறிப்பிட்டார்.

இதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

8 தமிழர்களைக் கொன்று குவித்து போர்க்குற்றம் செய்த ஒருவரை அதிபர் கோத்தபய ராஜபக்சே மன்னித்து விடுதலை செய்திருப்பது, உலகமெங்கும் வாழ்கிற தமிழர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் செயலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதையொட்டி ட்விட்டரில் அந்த அமைப்பு வெளியிட்ட பதிவில், “இத்தகைய தருணத்தில் சுனில் ரத்நாயகாவை அதிபர் கோத்தபய ராஜபக்சே விடுதலை செய்திருப்பது சந்தர்ப்பவாதம் ஆகும். இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்” என கூறி உள்ளது.

இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிற ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பு கருத்துத் தெரிவிக்கையில், “கொடுங்குற்றத்தில் ஈடுபட்டவர்களை கொரோனா வைரஸ் பரவி வருவதை வாய்ப்பாகக் கருதி விடுதலை செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. பாதிக்கப்பட்டோருக்கு (தமிழர்களுக்கு) நீதி கேட்கும் உரிமை உள்ளது. நீதி வழங்குகிற கடமை, இலங்கை அரசுக்கு உள்ளது” என கூறி உள்ளது.

சுனில் ரத்நாயகாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்தது குறித்து அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வாவிடம் கருத்து கேட்டபோது அவர், “இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. எதையும் இரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது. மன்னிப்பு அளிக்கிற அதிகாரமும் உள்ளது. இதை யாரும் கேள்வி கேட்க முடியாது” என குறிப்பிட்டார்.

Leave a Response