சென்னை மூடப்பட்டது – 8 இடங்களில் சோதனைச் சாவடிகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வரும் 31 ஆம் தேதிவரை தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படுகின்றன. ஓர் இடத்தில் இருப்பவர்கள் அந்த மாவட்ட எல்லைகளைக் கடந்து செல்லவும் முடியாது மற்றவர்கள் அந்த மாவட்டத்துக்குள் நுழையவும் முடியாது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஓர் ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பணியில் உள்ளனர். முக்கியமான சாலைகளில் உதவி ஆணையர் தலைமையில் 30 காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு, பழைய மாமல்லபுரம் சாலையில் செம்மஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் பீர்க்கன்காரணை இரணி அம்மன்கோயில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நசரேத்பேட்டை, நெல்லூர் சாலையில் பாடியநல்லூர் எம்.ஏ.நகர், மணலி சாலையில் வெள்ளிவாயல், சிடிஎச் சாலையில் பாக்கம் மற்றும் கொட்டமேடு என சென்னையைச் சுற்றி 8 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகளைக் கடந்து யாரும் சென்னை நகருக்குள் நுழைய முடியாது. சென்னையில் இருந்து யாரும் வெளியே செல்லவும் முடியாது. மேலும், சோதனைச் சாவடிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.

சோதனைச் சாவடியில் யாராவது பிரச்சினை செய்தால் அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவர். சோதனைச் சாவடிகளில் விதிகளை மீறி யாராவது கடந்து சென்றால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, காவல்துறையினர் கண்டிப்புடன் செயல்படுவார்கள். மேலும், சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Response