பேராசிரியர் க.அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்

தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர், கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.10 மணி அளவில் அன்பழகன் மரணம் அடைந்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள அவருடைய வீட்டில் அவர் உடலுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள், திரையுலகத்தினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்….

இதழாளர், நூலாசிரியர், சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர், தமிழகச் சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் முதலான பொறுப்புகளில் பணியாற்றிய தி.மு.க பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response