திராவிட இயக்கத்தின் முதுசம் பேராசிரியர் க.அன்பழகன் மறைந்தார்

தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் பேராசிரியர் க.அன்பழகன். அவருக்கு வயது 98.

தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார். வீட்டிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர், கடந்த பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை.

இந்தநிலையில் பிப்ரவரி மாதம் 24-ந்தேதி அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.10 மணி அளவில் அன்பழகன் மரணம் அடைந்தார்.

அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். மருத்துவமனைக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.

அன்பழகன் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனைக்குத் திரண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் அரசியல்வாதி, எழுத்தாளர், பேச்சாளர் என்று பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கினார். திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் எம்.கல்யாணசுந்தரனார்-சுவர்ணம்பாள் தம்பதியருக்கு 1922-ம் ஆண்டு டிசம்பர் 19-ந்தேதி பிறந்தார்.

இவரது இயற்பெயர் ராமையா. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தார். 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1945-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி வெற்றிச்செல்வி என்பவரை தனது இல்லற வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

வெற்றிச்செல்வி மறைவிற்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.

அன்பழகன், முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார். 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி உறுப்பினராகவும், 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி உறுப்பினராகவும், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றினார்.

1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியைத் தழுவினார். அவரது அரசியல் வாழ்வில் ஒரு முறை மேல் சபை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராக 8 முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.

எழுத்தாளராக பல தமிழ்ச் சமூகக் கட்டுரைகளையும், நூல்களையும் க.அன்பழகன் எழுதி உள்ளார். இன-மொழி வாழ்வுரிமை போர், உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழினக் காவலர் கலைஞர், தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் உள்பட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.

திராவிட இயக்கத்தின் முதுசம் மறைந்தது.

Leave a Response