உங்க பணம் இருக்கு ஆனா இல்லை – யெஸ் பேங்க் சர்வர் முடக்கத்தால் மக்கள் பீதி

நிர்மலா சீதாராமன் அறிவிப்பின் பின்னணியில் எஸ் வங்கி திவால் ஆகி விட்டதாகத் தெரிகிறது இதனால் பீதி அடைந்துள்ள வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை மீட்டுக்கொள்ள ஏடிஎம் வாசல்களில் குவிந்துள்ளார்கள் . ஆனால் ஏடிஎம்களும் வேலை செய்யவில்லை.

எத்தனையாயிரம் கோடி ரூபாய் நீங்கள் வங்கியில் வைப்புப் தொகையாக வைத்திருந்தாலும் சரி, தற்போதைக்கு ஆளுக்கு ஐம்பதினாயிரம் மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள் என்று வங்கி அறிவித்துள்ளது.

இதனால் மக்கள் மத்தியில் பீதியும் ஆத்திரமும் கோபமும் பரவி உள்ளது.

என்ன நடந்தது?

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தனியார் வங்கியான `எஸ் பேங்க்’ ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க அவசரம் காட்டியதால் யெஸ் வங்கியின் சர்வர் முடக்கப்பட்டுள்ளது.

வாராக்கடன் அதிகரித்ததால் தனியார் வங்கியான `எஸ் பேங்க்’ கடுமையான நிதிச்சிக்கலில் தவித்து வந்தது. இந்நிலையில் `எஸ் பேங்க்’ முழுவதும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ரூ1500 கோடி இழப்பைச் சந்தித்தது எஸ் வங்கி.

வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரையில் வங்கியிலிருந்து அதிகபட்சமாக பணம் எடுக்கலாம். மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதிவரை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் எஸ் வங்கி இருக்கும்.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், வங்கியின் மூலதனத்தை பெருக்கவும், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை மீட்டெடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, இந்த ஒரு மாத காலகட்டத்தில் வாடிக்கையாளர் ஒருவர் தங்கள் கணக்கில் இருந்து 50ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என கூறியுள்ளது.இதனால், வாடிக்கையாளர்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என தெரிவித்துள்ளது.

மேலும் தவிர்க்க முடியாத திருமணம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவைகளுக்காக அவசரமாகப் பணம் தேவைப்பட்டால் வங்கி மேலாளரின் அனுமதியுடன் ரூ.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

பணத்தை அவசரம் அவசரமாக எடுக்க வாடிக்கையாளர்கள் முனைந்ததால் எஸ் வங்கியின் சர்வர் முடக்கப்பட்டுள்ளது. ரூ.50,000த்திற்கும் மேல் மாதாந்திர தவணை செலுத்துவோர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் வேறு நிதி நிறுவனங்களில், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்காக கடன், தவணைத் தொகை கட்ட வேண்டியிருந்தால் அந்தந்த நிறுவனங்கலுக்கு தகவலை அனுப்பி அவர்கள் மூலம் கடன், தவணைகளுக்கான நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவைக் கேட்டுப் பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் யெஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a Response